Wednesday 29 February 2012

TNPSC: 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்

 மார்ச்- 31க்குள் தேர்வு பற்றிய அறிவிப்பு: நட்ராஜ்

   தமிழக அரசில் 10 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளதாகவும், இது விரைவில் நிரப்பப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் கூறியுள்ளார்.

   காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் டி.என்.பி.எஸ்.சி. தீவிரம் காட்டி வருகிறது. முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடைபெறும் தேர்வுகளை 9 மாதத்திலும், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும் தேர்வுகளை 6 மாதத்திலும், எழுத்துத் தேர்வுகளை மூன்று மாதத்திலும் நடத்தி முடிக்க காலக்குறீயிடு நிர்ணயித்துள்ளோம்.  தமிழக அரசில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு மார்ச் 31-க்குள் வெளியிடப்படும். தேர்வாணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக இருக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட சிறப்புத் தேர்வு முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. நல்லவர்கள் அரசுத் துறைக்கு அதிகமாக வர வேண்டும். அப்போதுதான் அனைத்துத் துறைகளிலும் நாடு முன்னேறும்.  கால்நடைச் செல்வங்களை பாதுகாப்பது நமது கடமையாகும். நான் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது குதிரைப் படையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தேன். நாடு முழுவதும் ஆண்டுக்கு 5 ஆயிரம் கால்நடை மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், 2 ஆயிரம் மருத்துவர்கள் மட்டுமே படிப்பை முடித்து வருகின்றனர். இதனால் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது. இதைச் சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் ஆர். நடராஜ்.

TNPSC GROUP-IV RESULT

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு போட்டித் தேர்வு முடிவு அறிவிப்பு 


    குரூப்-IV தரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு போட்டித் தேர்வு ஒன்றை TNPSC கடந்த ஆகஸ்ட் 7 -ம் தேதி நடத்தியது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் ஸ்டெனோ ஆகிய பதவிகளுக்காக இத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகள் நேற்று TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை அறிய 

இங்கே சொடுக்கவும். http://www.tnpsc.gov.in/Docu/g4da2k11_seldoc.pdf

ஒரே நாளில் இரு தேர்வு முடிவுகள்:   

       மேலும் 2003- 2006, 2003-2007 வரையிலான காலக்கட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநர்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு 2010 அக்டோபர் 10-ல் தேர்வு நடத்தப்பட்டது. 2 உதவி இயக்குநர்கள் காலியிடம், 30 குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியல் அன்றைய தினம் மாலையிலேயே அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.

Tuesday 28 February 2012

TRB-PG தேர்வு அறிவிப்பு

2895  பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு  
      முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு வரும் மே 27-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 16-ம் தேதி முதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் இந்த ஆண்டு 53 ஆயிரம் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2,895 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.  இவர்கள் அனைவரும் போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  போட்டித் தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மே 27-ல் போட்டித் தேர்வு நடத்தப்படும். இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 16 முதல் வழங்கப்படும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி மார்ச் 30 ஆகும். விருப்பமுள்ளவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் ரூ.50 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வுக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.  தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.250 செலுத்தினால் போதும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் மட்டுமே நேரில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் முதுநிலைப் பட்டமும் பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். ஏற்கெனவே பதிவு செய்யாதவர்கள் மார்ச் 30-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர்.  போட்டித் தேர்வு விவரம்: போட்டித் தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். பிரதான பாடத்தில் 110 மதிப்பெண், கல்வி கற்பிக்கும் முறையில் 30 மதிப்பெண், பொது அறிவில் 10 மதிப்பெண்ணுக்கு வினாக்கள் இடம்பெறும். 3 மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வில் அப்ஜெக்டிவ் டைப் மல்டிபிள் சாய்ஸ் வடிவில் வினாக்கள் இருக்கும்.  மே 27-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பின்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால், பதிவு மூப்புக்கு ஏற்ப கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்.  பதிவு செய்து 1 முதல் 3 ஆண்டுகள்வரை இருந்தால் 1 மதிப்பெண்ணும், 3 முதல் 5 ஆண்டுகள் வரை இருந்தால் 2 மதிப்பெண்ணும், 5 முதல் 10 ஆண்டுகள் இருந்தால் 3 மதிப்பெண்ணும், 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தால் 4 மதிப்பெண்ணும் வழங்கப்படும். அதுபோலவே அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றியிருந்தால் அதற்கும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். 1 முதல் 2 ஆண்டுகள் பணியாற்றிருந்தால் 1 மதிப்பெண்ணும், 2 முதல் 5 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் 2 மதிப்பெண்ணும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிருந்தால் 3 மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்கப்படும்.  

     இத்தேர்வு மூலம் தமிழ் பாடத்திற்கு 601 பேரும், ஆங்கிலம் 349, கணிதம் 315, இயற்பியல் 244, வேதியியல் 222, தாவரவியல் 204, விலங்கியல் 197, வரலாறு 170, புவியியல் 24, பொருளாதாரம் 246, வணிகவியல் 275, பொலிடிக்கல் சயின்ஸ் 4, ஹோம் சயின்ஸ் 5, இந்தியன் கல்ச்சர் 1, உடற்கல்வி இயக்குனர் கிரேடு 1 - 36, தெலுங்கு 1, உருது 1 உட்பட மொத்தம் 2,895 பேர் நியமனம் செய்யப்படுகின்றனர்

மேலும் விவரங்களுக்கு  
இங்கே  சொடுக்கவும்  :http://trb.tn.nic.in/PG2012/28022012/Notification.pdf


பாடவாரியான SYLLABUS விவரங்களுக்கு 
இங்கே  சொடுக்கவும்  :http://trb.tn.nic.in/PG2012/28022012/TAM.pdf 
                                                   http://trb.tn.nic.in/PG2012/28022012/ENG.pdf 
                                                   http://trb.tn.nic.in/PG2012/28022012/MAT.pdf 
                                                   http://trb.tn.nic.in/PG2012/28022012/PHY.pdf 
                                                   http://trb.tn.nic.in/PG2012/28022012/CHE.pdf 
                                                   http://trb.tn.nic.in/PG2012/28022012/BOT.pdf 
                                                   http://trb.tn.nic.in/PG2012/28022012/ZOO.pdf 
                                                   http://trb.tn.nic.in/PG2012/28022012/HIS.pdf 
                                                   http://trb.tn.nic.in/PG2012/28022012/GEO.pdf 
                                                   http://trb.tn.nic.in/PG2012/28022012/ECO.pdf 
                                                   http://trb.tn.nic.in/PG2012/28022012/COM.pdf 

 

Monday 27 February 2012

EPFO காலி பணியிடங்கள் - 1,943

     

வருங்கால வைப்பு நிதியில் 1,943 பணியிடங்கள்


   தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎப்ஓ) தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட 21 மாநிலங்களில் 1,943 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் 76 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த இடங்கள் விளையாட்டு வீரர்கள் பிரிவில் தமிழக பிராந்தியத்தில் 16 இடங்களும், பொதுவில் 382 இடங்கள் (பொது-208, எஸ்சி-73, எஸ்டி-1, ஓபிசி-103).

கல்வித் தகுதி: ஏதேனும் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சியுடன், மணிக்கு 5000 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் அவசியம்.

வயது: 18-27, ஒதுக்கீட்டின் படி வயது தளர்வு உண்டு. சம்பளம்: ரூ.5,200- ரூ. 20,200. மொத்த கட்டணங்கள்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், ஊனமுற்றோருக்கு ரூ.90, இதர பிரிவினருக்கு ரூ.315. இப்பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்களை 
www.epfindia.gov.in  மற்றும்  www.epfindia.com என்ற இணையதள முகவரிகளுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பவும். கடைசி நாள்: 09.03.2012. இதற்கான தேர்வு தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவையில் நடக்கும். மேலும், தகவலுக்கு பிப்ரவரி 11-17ம் தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் பார்க்கவும்.

Thursday 23 February 2012

GROUP-II தேர்வு முடிவு:துறை ஒதுக்கீடு

 GROUP-II தேர்வு முடிவுகள் வெளியீடு: 1,384 பேர் தேர்வு

    சென்னை உயர்நீதிமன்றம்  அனுமதி வழங்கியதை அடுத்து, குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்ற  1,384 பேரின் தேர்வுப் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள், அந்தந்த துறைத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., செயலர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.

        நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலகத்தில், உதவிப் பிரிவு அலுவலர் பணி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், வருவாய்த் துறையில் உதவியாளர், உதவி வணிகவரி அலுவலர் உட்பட, பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வை, 2010 ஏப்ரல் 11ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. எழுத்துத் தேர்வுக்குப் பின் நடந்த நேர்முகத் தேர்வில், 2,574 பேர் பங்கேற்றனர். இரு தேர்வுகளிலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலை, கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. இந்நிலையில், ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால், இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடுவது நிறுத்தப்பட்டது. கடந்த 9ம் தேதி, தேர்வு முடிவை வெளியிட, ஐகோர்ட் அனுமதி வழங்கியதை அடுத்து, தேர்வு செய்யப்பட்ட 1,384 பேரின் விவரங்களை, பல்வேறு துறைகளின் தலைவர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., அனுப்பியுள்ளது. நேர்முகத் தேர்வு அல்லாத, 240 பதவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்ததும், மார்ச் 15ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என, தேர்வாணையச் செயலர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறப்பு ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு

சிறப்பு ஆசிரியர் பணியிடத்திற்கு தேர்வானவர்களின் பட்டியல்
  தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடத்திற்கு பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள்  தங்களது பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து 90 தையல் ஆசிரியர்கள், 309 ஓவிய ஆசிரியர்கள் மற்றும் 39 இசை ஆசிரியர்கள் பணிக்காலியிடங்களுக்கான காலியிட அறிவிக்கை பெறப்பட்டது. இப்பணிக் காலியிடங்கள் மாநில அளவில் அமைந்த 31.1.2012 அன்றைய நிலவரப்படி தகுதியுள்ள வேலைவாய்ப்பக பதிவுதாரர்களின் பெயர், பதிவு மூப்பு விவரங்கள், பாடவாரியாகவும், இனவாரியாகவும் www.tn.gov.in என்கிற தமிழக அரசின் இணைய தளத்தினில் வெளியிடப்பட்டுள்ளது. 
       மேலும், இவ்விணையதளத்தில் மேற்கூறிய பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இன சுழற்சி விவரங்கள் ஆகியவற்றையும் காணலாம். மேற்படி இணையதளத்தில் மனுதாரர்கள் தங்களது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பரிந்துரை பதிவு மூப்பு தேதிக்குள் தகுதியுள்ள மனுதாரர்கள் எவரும் விடுபட்டிருப்பின் அவர்கள் தாங்கள் பதிவு செய்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை உரிய ஆதாரத்துடன் 27.02.2012 தேதிக்குள் நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 27.02.2012 தேதிக்குப் பின்னர் தொடர்பு கொள்ளும் மனுதாரர்களின் கோரிக்கை ஏதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday 22 February 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு- ஐயங்களும் தீர்வுகளும்

                            TET செய்திகள்
 பாடத் திட்டம் என்ன?
      ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.மே இறுதியில், ஆசிரியர் தகுதித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை, ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை, எட்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தின் அடிப்படையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாடத் திட்டம் இந்த அளவில் இருந்தாலும், விண்ணப்பதாரர்களை சிந்திக்க வைக்கும் வகையில், அதிகளவில் கேள்விகள் இடம்பெற உள்ளன. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்களை இறுதி செய்து, அரசின் ஒப்புதலுக்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பி வைத்தது. இதற்கு, அரசு தற்போது ஒப்புதல் அளித்து விட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்த விவரங்கள், அரசிதழில்  வெளியான பின், தகுதித் தேர்வு குறித்த அறிவிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்; இந்தப் பணிகள் அனைத்தும், 10 நாட்களுக்குள் நிறைவடைய வாய்ப்புகள் இருக்கின்றன என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்வு எப்போது?
மே இறுதியில் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக, எட்டு லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. விண்ணப்பத்தின் விலை, 50 ரூபாயாகவும், தேர்வுக் கட்டணம், 500 ரூபாயாகவும் நிர்ணயிக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் என, இரு பிரிவினருக்கு, தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவினருக்கும், தலா, 150 மதிப்பெண்களுக்கு, பதில் தேர்வு செய்யும் முறையில் தேர்வு நடத்தப்படும். தமிழ், ஆங்கிலம், உளவியல், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ், ஒவ்வொன்றில் இருந்தும் தலா, 30 மதிப்பெண்கள் வீதம், 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில், தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களாக, 90 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் ஒப்புதல் கிடைத்துவிடும் எனக் கூறப்படுகிறது. அனுமதி கிடைத்ததும், தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்.
ஐயங்களும் தீர்வுகளும்
ஆசிரியர் தகுதித் தேர்வில் உள்ள குழப்பங்கள் குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். தகுதித் தேர்வில் உள்ள பல்வேறு சந்தேகங்கள், குழப்பங்கள் தீர்க்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஆசிரியர் பணிக்கு வர விரும்பும் அனைவரும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கல்லூரி ஆசிரியர் பணியில் சேர விரும்புவோருக்கு, "நெட்' அல்லது, "ஸ்லெட்' எப்படி ஒரு தகுதித் தேர்வாக இருக்கிறதோ, அதேபோல் தான், "டிஇடி' தேர்வும். ஆசிரியர் பணிக்குச் செல்ல, இது ஒரு தகுதித் தேர்வு;   

இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ், 7 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.

இத்தேர்வு ஆண்டுதோறும் நடக்கும். ஆசிரியர் பணிக்கு படித்த அனைவரும்இந்த தகுதித் தேர்வை எழுதலாம்.

இத்தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, பணி நியமனம் நடைபெறாது. எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தான், பணி நியமனம் இருக்கும்.

இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு முடியும் வரை, மாநில பதிவுமூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படும்.

வழக்கு முடிவுக்கு வந்தபின், இடைநிலை ஆசிரியர்களை எந்த வகையில் நியமனம் செய்வது என்பது குறித்து, தமிழக அரசு முடிவு செய்யும்.

அதே நேரத்தில், அவர்கள் தகுதித் தேர்வில் பங்கேற்று, தகுதி ஏற்படுத்திக்கொள்ள எந்தத் தடையும் இல்லை.

பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகிய பணியிடங்கள், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படும்.

விரைவில் தேர்வு செய்யப்பட உள்ள முதுகலை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களும், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படுவார்கள்.

இனிமேல், பதிவுமூப்பு அடிப்படையில், எவ்வித பணி நியமனங்களும் இருக்காது.

இந்த வகை ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்கு முன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். பட்டதாரி தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில், கணிதம்-அறிவியல் அல்லது சமூகக் கல்வி ஆகிய ஏதாவது ஒன்றின் கீழ், 60 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்க வேண்டும் என இருப்பதை மாற்றி, தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத்தில் இருந்தே, 60 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இதிலும் எவ்வித பிரச்னையும் இருக்காது.

மே மாதத்தில், முதல் தகுதித் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. அதன்பின், ஆண்டுதோறும் குறிப்பிட்ட தேதியில் இத்தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப்பின் பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும், இத்தேர்வை எழுத உள்ளனர்.


5 முதல், 10ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

 இடைநிலைக் கல்வி ஆசிரியர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டத்தை, அரசிதழில், தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

6 முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது.

கட்டாயக் கல்விச் சட்டப்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, தகுதி தேர்வு நடத்தி தான், மாநில அரசுகள் நியமித்தாக வேண்டும்.

இந்நிலையில், "தமிழகத்தில், மாநில அளவிலான வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்" என, 2008ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை, மாநில அளவிலான வேலைவாய்ப்பு, பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படும்.

பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை, அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, எழுத்துத் தேர்வு அடிப்படையில், நியமனம் செய்யப்படுவர்.

இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை நியமிக்கும் பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும். தேசிய கவுன்சில் வகுத்துள்ள கல்வித் தகுதி உள்ளவர்கள் தான், ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொள்ள முடியும்.

தேர்வு முறை

* தேர்வில், அனைத்து கேள்விகளும், நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு மதிப்பெண் அளிக்கப்படும்.

* இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (முதல் தாள்), ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (இரண்டாம் தாள்) இடம்பெறும். எந்த வகுப்பு வேண்டுமானாலும் எடுக்க தயாராக உள்ளவர்கள்இரண்டையும் எழுத வேண்டும்.

* முதல் தாள், மொத்தம் 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும்.

* இரண்டாம் தாள், 150 கேள்விகள் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.

* அறிவியல் ஆசிரியர்களுக்கு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் இருந்து 60 கேள்விகளும், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, அதில் இருந்து 60 கேள்விகளும் கேட்கப்படும்.

* தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெறுவோர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். எனினும், பள்ளி நிர்வாகம், அரசு, உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு, இடஒதுக்கீடு கொள்கையின்படி, சலுகைகள் வழங்கலாம். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்விச் சட்டப்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலை, கல்வியியல் ஆணையமாக மத்திய அரசு நியமித்துள்ளது. இந்த ஆணையம், அனைத்து மாநிலங்களிலும் தொடக்கக் கல்விக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி தான் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டு, இதற்கான வழிமுறைகளையும் வகுத்துள்ளது.
  
  தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் (1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் ஆசிரியர் பட்டயப் படிப்பை D.T.Ed, முடித்திருக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர்கள் (6 முதல் 8 வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் பி.எட்.(B.Ed) படித்திருக்க வேண்டும். அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.

இதுதவிர, இவர்கள் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆணையம் வகுத்துள்ள குறைந்தபட்ச தகுதி இல்லாத ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள், அந்த தகுதியை பெற வேண்டும்.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க தகுதித் தேர்வு நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற மொத்தம் 150-க்கு 60% மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தால், அது அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை செல்லத்தக்கதாக இருக்கும்.

ஆசிரியராக விரும்புபவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

"மல்டிபிள் சாய்ஸ் வினாக்கள்' (Objective Type) வடிவில் முதல் தாள், இரண்டாம் தாள் என இந்தத் தேர்வு நடத்தப்படும்.

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தத் தேர்வை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த, நாடு முழுவதும் மிக அதிக அளவிலான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது.

1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த அவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.

இந்தத் தேர்வில்  பங்கேற்க தகுதிகள்

1. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள விதிமுறைகளின் படி ஆசிரியர் பட்டயம்பட்டப்படிப்பு முடித்தவர்கள்.

2. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிப்பவர்கள்.

150 மதிப்பெண்ணுக்குத் தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வு 150 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட வேண்டும். இந்தத் தேர்வு 90 நிமிஷங்கள் கொண்டதாக இருக்கும்.

இவையனைத்தும் ஒரு மதிப்பெண் வினாக்களாக இருக்கும். இந்தத் தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படும்.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் முதல் தாளையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும்.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறையாவது நடத்தப்பட வேண்டும்.

இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால், அது 7 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும்.

ஒருவர் இந்தத் தேர்வில் தனது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள மீண்டும் தேர்வு எழுதலாம்.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழில் பதிவு எண், தேர்வெழுதிய ஆண்டு, மாதம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

முதல் தாளுக்கான கேள்வி அமைப்பு

 1. குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை 30 மதிப்பெண்
 2. மொழித்தாள் -1(கற்பிக்கும் மொழி) 30 மதிப்பெண்
 3. மொழித்தாள் -2(விருப்ப மொழி) 30 மதிப்பெண்
 4. கணிதம் 30மதிப்பெண்
 5.சுற்றுச்சூழலியல் 30 மதிப்பெண்

 இரண்டாம் தாளுக்கான கேள்வி அமைப்பு

 1. குழந்தைகள் மேம்பாடு மற்றும்
          கற்பித்தல் முறை (கட்டாயம்) 30 மதிப்பெண்
 2. மொழித்தாள் - 1(கட்டாயம்) 30 மதிப்பெண்
 3. மொழித்தாள் - 2(கட்டாயம்) 30 மதிப்பெண்
 4. (அ) கணிதம் மற்றும் அறிவியல்
 (கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) 60 மதிப்பெண்
 (ஆ) சமூகவியல் -(சமூகவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) 60 மதிப்பெண்
 (இ) பிற ஆசிரியர்கள் இதில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதினால்   போதுமானது.

Friday 17 February 2012

நவீனமயமாகிறது TNPSC நடைமுறை



நவீனமயமாகிறது அரசுப் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும்  நடைமுறை


       தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை நவீனமயமாகிறது. இதற்கான புதிய திட்டத்தைச் செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் உதவி ஆட்சியர் முதல் கடைநிலை ஊழியர் வரை அரசுத் துறைகள் அனைத்துக்குமான ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு தேர்வு அறிவிக்கப்படும் போதும், விண்ணப்பங்களை விநியோகம் செய்வதற்கும், பரிசீலிப்பதற்கும் தனித்தனிப் பிரிவுகள் அமைக்கப்படும். குறிப்பாக, குரூப் 2, வி.ஏ.ஓ. போன்ற தேர்வுகளுக்காகப் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து நுழைவுச் சீட்டுகளை வழங்க தேர்வாணைய அலுவலகத்தில் பிரிவு அலுவலர்களைத் தலைவராகக் கொண்டு 90 முதல் 100 பிரிவுகள் வரை கூட அமைக்கப்படும். இந்தப் பணிகள் இரவு பகலாக நடைபெறும். இது ஊழியர்கள் உள்பட அலுவலகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் கடுமையான பணிச்சுமையை ஏற்படுத்தும். இந்த நிலையில், விண்ணப்பங்களைப் பரிசீலிப்பது முதல் தேர்வு முடிவுகளை வெளியிடுவது வரை நவீன நடைமுறையைப் புகுத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. 
  
                              பணியாளர் தேர்வு  மேலாண்மைத் திட்டம் எனப்படும்  RPMS  
( RECRUITMENT PROCESS MANAGEMENT SYSTEM ) என்கிற புதிய திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் இப்போது கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களைப் பரிசீலிப்பது, விடைத்தாள்களைப் பிரதியெடுப்பது, தகவல்களை ஒருங்கிணைப்பது, முடிவுகளை வெளியிடுவது என அனைத்தையும் ஒரு தொடர்ச்சியான செயல்பாடாக மாற்றவும், தானியங்கி முறையில் அதைச் செய்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, அதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மார்ச் 1-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைப்பளு குறையும் : தேர்வாணையப் பணிகள் அனைத்தும் தானியங்கி நடைமுறையில் மாற்றப்படும்போது, ஊழியர்களுக்கான பணிச்சுமை பெருமளவில் குறையும். மேலும், ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுக்காமல் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்வாணைய அலுவலகத்தில் பணியாளர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில், தானியங்கி முறையிலான விண்ணப்பங்கள் பரிசீலனை போன்ற நடைமுறைகள் பெருமளவு கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Monday 13 February 2012

‘‘நம்பிக்கையோடு வாருங்கள் இளைஞர்களே’’ -நட்ராஜ் அழைப்பு

          TNPSC :  புத்துயிர்அளிப்பாரா புதிய தலைவர்?

  தமிழக அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நல்ல பாதையில் பயணிக்கப் போகிறது என்கிற நம்பிக்கையைத் துளிர்விடச் செய்துள்ளது.

‘டி.என்.பி.எஸ்.சி" என்று சொன்னாலே உடனடியாக நினைவுக்கு வருவது லஞ்சமும் ஊழலும்தான். அந்த அளவுக்கு முறைகேடுகள் புரையோடிப் போயிருக்கிற ஓர் இடமாக டி.என்.பி.எஸ்.சி. மாறிவிட்டது. நேர்மையற்ற அதிகாரிகளும், ஊழல்மிக்க அரசியல்வாதிகளும் இதற்கு முக்கியக் காரணம். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வீடுகளில் நடைபெற்ற சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பணமூட்டைகளே அனைத்திற்கும் சாட்சி.

அதிரடி நடவடிக்கையின் தொடர்ச்சியாக, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆர்.நட்ராஜை, டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது தமிழக அரசு. இந்த மாற்றத்திற்குப் பிறகு, டி.என்.பிஸ்.சி. அமைப்பின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

"சுமார் 15 ஆண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி.யே கதி என்று கிடந்தவன் நான். சிவில் சர்வீஸ் தேர்வில்கூட நேர்முகத்தேர்வு வரை சென்றேன். ஆனால், டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் என்னால் வெற்றிபெற முடியவில்லை. அந்தளவுக்கு அங்கு ஊழல் மலிந்து கிடக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பே உரிய சீர்திருத்தங்களைச் செய்திருந்தால், என்னைப் போன்ற பல இளைஞர்கள் அரசுப்பணிக்குச் சென்றிருப்பார்கள். பரவாயில்லை, இப்போதாவது டி.என்.பி.எஸ்.சி.க்கு விமோச்சனம் கிடைத்திருக்கிறதே என்று மகிழ்ச்சி அடைகிறேன்" என்கிறார், மதுரையில் போட்டித்தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையம் நடத்திவரும் இளைஞர் ஒருவர்.

டி.என்.பி.எஸ்.சி. அமைப்பு சிறப்பாக செயல்படுவதற்கு என்ன செய்ய வேண்டும், அந்த அமைப்பின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை போட்டித் தேர்வுகளில் ஆர்வமுள்ள சிலரிடம் கேட்டோம்.

துணை கலெக்டர்,  டி.எஸ்.பி. போன்ற உயர்ந்த பதவிக்குச் செல்ல வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருந்தார் ஒரு இளைஞர். பத்தாண்டுகளாக கடின உழைப்பில் ஈடுபட்ட அந்த கிராமத்து இளைஞரால், கீழ்நிலை ஊழியராக மட்டுமே அரசுப்பணியில் சேர முடிந்தது. "பணம் கொடுத்தால்தான் அரசு வேலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே, டி.என்.பி.எஸ்.சி. போன்ற அமைப்புகளில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது அவசியம். நேர்முகத் தேர்வுகளில்தான் அதிகமாக ஊழல் நடைபெறுகிறது என்று சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும்போது, குரூப் 1 உள்ளிட்ட சில தேர்வுகள் தவிர, மற்ற பணிகளுக்கான தேர்வுகளுக்கு நேர்முகத் தேர்வை எடுத்துவிடலாம். அதற்குப் பதிலாக, ஆளுமை திறனை அறிந்து கொள்ள சைக்கோமெட்ரிக் தேர்வு நடத்தலாம்" என்கிறார் அந்த இளைஞர்.

"டி.என்.பி.எஸ்.சி. செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை என்பது மிக மிக முக்கியம். அதை உறுதி செய்துவிட்டாலே பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும். டி.என்.பி.எஸ்.சி. நடத்துகிற ஒவ்வொரு தேர்வுக்குமான கேள்வித்தாள்களையும், அவற்றுக்கான பதில்களையும் சிறந்த நிபுணர் குழுவின் மூலமாக தயாரிக்க வேண்டும். கேள்விகளும், பதில்களும் 100 சதவிகிதம் பிழையின்றி இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். குரூப் 1 போன்ற மிக முக்கியப் பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும். ரயில்வே தேர்வாணையம் உள்ளிட்ட தேர்வுகளில் ஓ.எம்.ஆர். ஷீட்டின் நகல், மாணவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. அதுபோல, டி.என்.பி.எஸ்.சி. தேர்விலும் ஓ.எம்.ஆர். ஷீட்டின் நகல் வழங்கப்பட வேண்டும். கேள்விக்கான விடைகளை, தேர்வு முடிந்தவுடன் கட்டாயம் வெளியிட வேண்டும். நேர்முகத்தேர்வு வெப்கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு அதை, மதிப்பெண் அளிப்பதற்கு முன்பாக ஆணையத்தின் தலைவர் நேரடியாகப் பார்க்க வேண்டும்.

சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் கால அட்டவணைப்படி நடத்தப்படுகிறது. தேர்வுக்கான அறிவிப்பாணை ஒவ்வொரு ஜனவரி மாதமும் தவறாமல் வெளியாகிறது. ஆரம்பக்கட்ட தேர்வு, அதற்கான முடிவுகள் ஆகியவற்றுக்கான தேதிகள், பிறகு முக்கியத் தேர்வுக்கான தேதிகள், அதற்கான முடிவுகள் வெளியாகும் காலம் ஆகிய விவரங்கள் முன்கூட்டியே தெரிகிறது. அதேபோல டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளும் காலஅட்டவணைப்படி நடத்தப்பட்டு, உரிய காலத்தில் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்" என்கிறார், சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமியின் இயக்குநர் சத்யா.

டி.என்.பி.எஸ்.சி. சிறப்பாக செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவுடன் அனைவரும் தவறாமல் சொன்ன ஒரு கருத்து, "புதிய தலைவர் கூறியுள்ள விஷயங்களை அப்படியே அமல்படுத்தினால் போதும்"என்பதுதான்.


தேர்வாணையம் சிறப்பாக செயல்பட செய்ய வேண்டியது என்ன?
- இளைஞர்கள் பேட்டி

பிரபாகர் (சென்னை) : ஒவ்வொரு பிரிவினருக்கும் கட்-ஆப் மதிப்பெண் என்ன என்ற விவரம், தேர்வு எழுதுபவர்களுக்குத் தெரிவதில்லை. எனவே, கட்-ஆப் மதிப்பெண் குறித்த விவரங்களை கட்டாயம் வெளியிட வேண்டும். தேர்வு எழுதிய மாணவர் கேட்டால், அவருக்கு விடைத்தாள் வழங்கப்பட வேண்டும்.

கோபி (பொள்ளாச்சி) : கடந்த ஜூன் மாதம் தேர்வு எழுதினேன். இதுவரையில் முடிவு வெளியிடப்படவில்லை. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடும்போதே, தேர்வு நடைபெறும் நாள் மற்றும் முடிவுகள் வெளியாகும் நாள் ஆகியவற்றையும் அறிவிக்க வேண்டும். யு.பி.எஸ்.சி. மற்றும் சில தேர்வு வாரியங்கள் ஓராண்டில் என்னென்ன தேர்வுகளை நடத்தப்போகிறோம் என்ற விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகின்றன. இதனால், நாம் எந்தத் தேர்வை எழுதலாம், எந்தத் தேர்வு நமக்குத் தேவையில்லை என்பதை முன்கூட்டியே முடிவு செய்யலாம். இதேபோல டி.என்.பி.எஸ்.சி.யும் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்க வேண்டும்.

உதயக்குமார் (மதுரை): தொடர்ந்து தேர்வு எழுதுகிறேன். தேர்வு முடிவில் என் நம்பர் வருவதில்லை. மீண்டும் அடுத்த தேர்வுக்குத் தயாராகிறேன். கஷ்டப்பட்டு படிக்கிறேன். அதிகாலை 2 மணி வரை படித்துவிட்டு மறுநாள், தனியார் கம்பெனி வேலைக்குச் செல்கிறேன். இப்படியே ஏழெட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. என்னைப்போன்ற  பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் நிலை இதுதான். என் விடைத்தாளை எனக்குக் கொடுத்தால் என்னுடைய ப்ளஸ், மைனஸ் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

ஜோஷ்வா (நெல்லை) :
கட்-ஆப் மதிப்பெண் என்ன, வெயிட்டிங் லிஸ்ட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற விவரங்களை வெளியிட வேண்டும். குரூப் 1, குரூப் 2 என ஒவ்வொரு தேர்வுக்குமான பாடத்திட்டங்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு வெளியில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும். இதனால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.



‘நம்பிக்கையோடு   வாருங்கள்        இளைஞர்களே’’
 -டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் பேட்டி

‘‘அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நிறைய சீர்திருத்தங்களைக்  கொண்டுவர உள்ளேன். முதலில், தேர்வாணையத்தைச் சூழ்ந்துள்ள புகைமண்டலம் அகற்றப்படும். நாணயம் பெறாத, நாணயமான சேவையாக தேர்வாணையம் செயல்படும். வெளிப்படையான நிர்வாகம் உறுதி செய்யப்படும்.

எழுத்துத் தேர்வு எப்போது, நேர்முகத் தேர்வு எப்போது, முடிவுகள் எப்போது என்ற விவரங்கள் அனைத்தும் கால அட்டவணையாக தயாரித்து வெளியிடப்படும். தேர்வு முறை, பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்படும். அரசுப் பணியாளர்களின் பணிப்பொறுப்புகளை கருத்தில் கொண்டு, தேர்வுக்கான பாடத் திட்டங்களில் உரிய மாற்றங்கள் கொண்டுவரப்படும். தேர்வர்களின் பகுத்தாய்வுத் திறனை ஆராயும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்படும். தேர்வு முடிந்த பிறகு, இணையதளத்தில் விடைகள் வெளியிடப்படும். தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் விடைத்தாள்களை சம்பந்தப்பட்ட தேர்வர்கள் பார்வையிடலாம்.  தேர்வு நடைபெறும் அறைகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். நேர்முகத் தேர்வுகள் வெப்கேமரா மூலம் பதிவு செய்யப்படும். தேவைப்பட்டால், வீடியோ பதிவை தேர்வர்கள் காணலாம். தேர்வாணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் கனிணியில் பதிவு செய்யப்படும்.

முடிவுகள் தாமதமாவதற்கு சில நியாயமான காரணங்கள் உள்ளன. எழுத்துத்தேர்வில் விடைத்தாள்கள் இரண்டு முறை மதிப்பீடு செய்யப்படுகிறது. அதில் வித்தியாசம் அதிகமாக இருந்தால் மூன்றாவது மதிப்பீட்டுக்கு அனுப்பப்படுகிறது. தேர்வு எழுதியவருக்கு முழுமையான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற விதிகள் உள்ளன. ஆனாலும்கூட, இந்த நடைமுறைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தாமதங்களைத் தவிர்த்தாலே பெரும்பாலான பிரச்சினைகளைத் தவிர்த்துவிடலாம்.

ஆணையத்தில் கொண்டுவரப்படும் சீர்திருத்தங்கள், தனிநபர்களைச் சார்ந்ததாக அல்லாமல் நிரந்தரமாக நீடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கு பணிக்காலம் குறைவாக இருந்தாலும்கூட, எடுத்திருக்கிற பணியில் அதிகநேரம் செலவிடுவதாலும், அக்கறையோடும் ஆர்வத்தோடும் செயல்படுவதாலும் பத்தாண்டுகளில் செய்யக்கூடிய காரியங்களை என்னால் ஒரே ஆண்டில் செய்துவிட முடியும்.

குறுக்கீடு (interference), நல்லமுறையில் தலையிடுதல் (intervention), என இரண்டு விதங்கள் உள்ளன. நல்ல நோக்கத்திற்காக ஒரு விஷயத்தில் தலையிட்டு நல்லது கெட்டது என்று சொல்வதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமை உண்டு. அதை குறுக்கீடு என்று சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரையில் நல்ல நோக்கத்திற்காக தலையிடுவதை வரவேற்பேன். குறுக்கீடுகளை அனுமதிக்க மாட்டேன்.

தேர்வாணையத்திலேயே காலிப்பணியிடங்கள் உள்ளன. அந்த இடங்களில் தற்காலிக பணியாளர்களை நியமித்திருக்கிறோம். ஒரு பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் அரசை அணுக வேண்டியுள்ளது. உரிய முயற்சிகளைச் செய்தால் காலிப்பணியிடங்களை நிரப்பலாம். அதற்கான நடவடிக்கையை எடுப்போம்.

தேர்வாணையத்தின் இணையதளத்தை விரிவுபடுத்தி மக்களுடன் கலந்துரையாடக்கூடிய வகையில் அதை மாற்றப் போகிறோம். அதேபோல, தேர்வு குறித்த தகவல் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்வதற்காக தேர்வாணையத்தில் ‘தகவல் அறியும் மையம்’ ஒன்றையும் ஏற்படுத்த உள்ளோம். அங்கு, கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் வழங்கப்படும். இளைஞர்கள் அதிகளவில் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். எனவே, தேர்வாணையத்திற்கு ஃபேஸ்புக்கிலும் ஒரு கணக்கு ஆரம்பிக்கலாம் என்று யோசித்திருக்கிறேன். இது, தேர்வாணையத்திற்கும் தேர்வு எழுதும் இளைஞர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

இதுபோன்ற நடவடிக்கைகளால் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும் என்று நம்புகிறேன். எனவே, நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் போட்டித்தேர்வுகளில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன்.’’


பெட்டி செய்தி: தாமதமாகும் முடிவுகள் தத்தளிக்கும் வாழ்க்கை
டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்துவிட்டு வெளியே வந்தால், அலுவலக வாசலில் நம்மை சூழ்ந்து கொண்டனர் இளைஞர்கள் சிலர். குரூப் 2எழுதி வெற்றிகரமாக தேர்ச்சியும் பெற்றுவிட்டு, பணி நியமன ஆணையை அரசு வழங்காததால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி, பரிதாபத்துக்கு உரியவர்களாக காட்சியளித்தனர். பெயர் மற்றும் புகைப்படம் வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டதால் பெயர்களை மாற்றியுள்ளோம்.

கண்ணன் (தூத்துக்குடி): "குரூப் 2தேர்வில் வெற்றிபெற்றுவிட்டதால் திருமணத்திற்கு பெண் பார்த்தோம். என் மனதிற்குப் பிடித்த அழகான, படித்த பெண். எனக்கு அரசு வேலை கிடைக்கப்போகிறது என்றதும் பெண் கொடுக்க ஆர்வம் காட்டினர். ஆனால், அரசு வேலை கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியவில்லை. பெண்ணின் அப்பா நேற்று எனக்கு போன் செய்தார். உனக்கு அரசு வேலை கிடைக்குமா, இல்லை என் பெண்ணை வேறு இடத்தில் கொடுக்கவா என்று கேட்கிறார். என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்றார் அந்த இளைஞர்.

சுதாகர் (திருவண்ணாமலை) : "குரூப் 2தேர்வில் வெற்றிபெற்றவுடன் பக்கத்து ஊரில் பெண் பார்த்து திருமணம் நிச்சயமாகி விட்டது. கடந்த ஆண்டே திருமணம் முடிந்திருக்க வேண்டும். ஆனால் பணி நியமன ஆணை வந்தால்தான் திருமணம் என்று பெண் வீட்டில் சொல்லிவிட்டார்கள். 2010ல் தேர்வு எழுதி, 2011ல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. ஆனால் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. இதனால் என் திருமணமே நின்று போனது. எனக்கு பேசி முடித்த பெண்ணை வேறு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்துவிட்டனர். இதை வெளியே சொல்லவும் வெட்கமாக இருக்கிறது. தூக்கத்தைத் தொலைத்து ஆறு மாதமாகிவிட்டது" என்றார் அவர்.

சிவக்குமார் (விழுப்புரம்) : "அரசு வேலை கிடைத்துவிட்டது என்று என் கிராமத்தில் அனைவருக்கும் ஸ்வீட் வழங்கினேன். அரசு வேலை என்னப்பா ஆச்சுன்னு இப்போது ஊர்க்காரர்கள் கேட்கிறார்கள். சிலர், என்னப்பா ஊரை ஏமாத்துறியா என்கிறார்கள். அரசு அறிவிப்பு வந்திருக்கிறதா என்று தினமும் பேப்பர் பார்ப்பதும், டி.வி.யில் செய்தி பார்ப்பதுமாக காலம் கழிகிறது."
                                                                                   நன்றி: புதிய தலைமுறை

Sunday 12 February 2012

ஓய்வுக்குப்பின்னும் இயங்கும் ஒரு நேர்மை.

                                        
         தமிழரின் புத்தாண்டான தை மாதம் பிறக்க இன்னும் சில தினங்களே இருக்க செல்லமுத்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தை பிறந்த சில  தினங்களில் ஆர். நடராஜ் தேர்வாணையத்தின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டு, முறைபடி பதவி யேற்றுக்கொண்டார்.

       தேர்வாணையம் போன்ற அமைப்பு களுக்கு பொதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்படுவது வழக்கம். ஏனெனில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டுமே நிர்வாக பணியை மிகச் சிறப்பாக செய்யக்கூடியவர்கள். இன்றைக்கு இந்திய அரசை நிர்வாகம் செய்து வருபவர்கள் இவர்களே. அப்படி இருக்கையில் வழக்கத்திற்கு மாறாக ஐ.பி.எஸ். அதிகாரியான ஆர். நடராஜ் தேர்வாணையத் தலைவராக நியமிக்கப்பட்டது, டி.என்.பி.எஸ்.சி. வழக்குகளை வெற்றிகரமாக நடத்த வேண்டுமென்ற தமிழக அரசின் திட்டம்தான் காரணம்.

   இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் டி.என்.பி.எஸ்.சி. வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றம் வரை நிச்சயம் செல்லும். இப்போது வழக்கை நடத்திவரும் தமிழக அரசுக்கு டி.என்.பி.எஸ்.சி. சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் தேவை. இன்னும் தேர்வாணைய உறுப்பினர்கள் யாரும்  ராஜினாமா செய்யாததால் அவர்கள் பற்றிய ஆவணங்கள் வழக்குகளுக்கு தேவை. இன்னும் ஒரு வருடத்திற்கு வழக்குகளை தமிழக அரசுக்கு சாதகமாக நடத்த குற்றவியல் மற்றும் புலனாய்வு திறன் பெற்றவர் டி.என்.பி.எஸ்.சி.யில் தலைவராக இருந்தால்தான் தமிழக அரசுக்கு நடந்த ஊழல்களை பரிபூரணமாக நிரூபிக்க முடியும். அந்த வகையில் நடராஜ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் நிச்சயம் உறுதிப்பட கூறமுடியும் கடந்த பத்து வருடங்களாக பதவியில் இருந்த தேர்வாணையத் தலைவர்களைவிட இவர் மிக மிக நேர்மையானவர். ஓய்வுப்பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி நடராஜ் தன்னுடைய பணிக் காலத்தில் ஊழல் புகார்களுக்கு ஆளாகாதவர். நேர்மையானவர் என்று பெயரெடுத்தவர். இலக்கிய ஆர்வலர். இவை எல்லாவற்றையும்விட, மிகச் சிறந்த மனிதாபிமானி. நடராஜ் கடைசியாக பணியாற்றிய சிறைத் துறையில் அவர் செய்த சேவைகளை பார்த்தாலே  அவரது நேர்மையை புரிந்துகொள்ள முடியும்.


         பொதுவாகவே சிறைக் கைதிகளை மனிதர்களாகவே மதிக்காத ஒரு தன்மை பெரும்பாலான மக்களிடம் பரவிக்கிடக்கிறது. காவல்துறையில் இது பல மடங்கு அதிகம். ஒரு குற்றத்தை புரிந்து, சிறைக்கு செல்ல வேண்டும் என்ற வேண்டுதலோடு யாரும்            பிறப்பது கிடையாது. கல்வி, பண்பு, குணநலன், வளர்ப்பு முறை ஆகியவைகளே ஒருவரை சிறையிலிருக்க வேண்டுமா வெளியிலிருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கிறது. இதை நன்கு புரிந்தவர்தான் நடராஜ். இவர் சிறைத் துறைத் தலைவராக இருந்த காலத்தில் அவர் செய்த சிறை சீர்திருத்தங்கள், பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியன. சிறைக் கைதிகளை "இல்லவாசிகள்' என்றுதான்  அழைக்க வேண்டும், கைதிகள் என்று அழைக்கக் கூடாது என்று உத்தரவிட்டு, அதை நடைமுறைப்படுத்தினார். சிறைக் கைதிகளுக்கு யோகா பயிற்சி, திருக்குறள் புத்தகங்கள் வழங்குதல், கைத்தொழில் கற்றுக்கொடுத்தல் என்று பல்வேறு சீர் திருத்தங்களை செயல்படுத்தினார். அண்ணா பிறந்த நாளின்போது கைதிகளை முன் விடுதலை செய்வதில் முனைப்பாக இருந்தார். ஞாயிற்றுக்கிழமைகளிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிறைக் கைதிகளைப் பார்வையிடலாம் என்ற புதிய உத்தரவைப்  பிறப்பித்தார். இது வேலைக்கு செல்வோருக்கு பெரும் நிம்மதி தந்தது.

          நடராஜ் அவர்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மகுடம் என்று சொல்ல வேண்டியது, பண்டிகை நாட்களில் தடுப்பு இல்லாமல், தண்டனைக் கைதிகள் தங்கள் உறவினர்களை பார்க்க அனுமதி தந்தது. சிறையில் பார்வையிடச் செல்பவர்களுக்கும் கைதிகளுக்கும் 8 அடி இடைவெளி உள்ள இரும்புப் கம்பித் தடுப்பு இருக்கும். அந்த தடுப்புக்கு அந்தப் பக்கம் உறவினர்களும், இந்தப் பக்கம் கைதிகளும் நின்று பேசுவார்கள்.  வரிசையாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கத்தினால் எப்படி இருக்கும். இதுதான் சிறை. ஆண்டுக்கணக்கில் தண்டனை பெற்று இருப்பவர்கள் இதே போல கம்பிகளின் இடைவெளியில் நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரமலான் போன்ற பண்டிகை நாட்களில் தண்டனை சிறைவாசிகள், கம்பித்தடுப்பு இல்லாமல் அருகருகே உட்கார்ந்து சந்திக்கலாம் என்ற புதிய சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார். 10 ஆண்டுகளாக உங்கள் குழந்தையை கம்பிக்கு அந்தப்பக்கம் இருந்து பார்த்து பழகிவிட்டு, ஒருநாள், உங்கள் குழந்தையை மடியில் வைத்து கொஞ்சினால் எப்படி இருக்கும்? அந்த உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகள் உள்ளதா? இதையடுத்து கைதிகள் மிகப் பெரிய அளவில் இவரை கொண்டாடினர். இப்படி சிறைத்துறையில் சீர்திருத்தங் களை கொண்டவந்தவர்தான் இப்போது தமிழக இளைஞர்கள் மகிழும் வகையில் பல  மாற்றங்களை டி.என்.பி.எஸ்.சி.யில் உடனடியாக அறிவித்துள்ளார்.

சீர்திருத்தங்கள் சில:

தேர்வாணையத்தின் புதிய தலைவராக நடராஜ் பதவி  ஏற்றதும் அறிவித்த முக்கிய சீர்திருத்தங்கள்.

* தேர்வு பற்றிய வெளிப்படையான நிர்வாகம்   அமைக்கப்படும்.

* தேர்வு முடிந்த பிறகு வினாக்களுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியிடப் படும். விடைகளில் ஆட்சேபனை இருந்தால் யாரும் தெரிவிக்கலாம். இந்த தகவல் தெரிவிக்க 7 நாட்கள் முதல் 10 நாட்கள் காலஅவகாசம் கொடுக்கப்படும். அதன் பின்னர் நிபுணர்குழு அமைத்து விடைகள் சரி என்று தெரிந்த பின்னர் தேர்வுத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். அதன் பின்னர் முடிவு அறிவிக்கப்படும்.

* தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் விடைத்தாள்களை விரும்பிய தேர்வர்கள் பார்வையிடலாம்.

* தேர்வுகளுக்கு உரிய தேர்வு முறை, பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்படும்.

* அரசுப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிப் பொறுப்புகளை கருத்தில் கொண்டு தேர்வுக்கான பாடத்திட்டங்களில் உரிய மாற்றங்களும், தேர்வர்களின் பகுத்தாய்வு திறனை ஆராயும் வகையிலும் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படும்.

* தேர்வுக்காக இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்படும்.

* எந்த தேதியில் எந்த தேர்வு நடத்தப்படும், எந்த தேதியில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும், எந்த தேதியில் முடிவு அறிவிக்கப்படும் என்ற அனைத்து விவரங்களும் கால அட்டவணையாக தயாரித்து வெளியிடப்படும்.

* நேர்முகத் தேர்வு வெப்கேமரா மூலம் பதிவு செய்யப்படும். யாருக்காவது சந்தேகம் வந்தால் அவர்கள் வந்து பதில் அளித்ததை காணமுடியும்.

* குரூப் I தேர்வு, குரூப் II தேர்வுகளுக்கு ஒரே கல்வித்தகுதிதான். எனவே அவர்கள் ஒருமுறை தேர்வு எழுத விண்ணப்பித்தால் போதும். அவர்களுக்கு ஒரு அடையாள குறியீட்டு எண் கொடுக்கப்படும். அதை  அவர்கள் பத்திரமாக வைத்திருந்தால் மறுமுறை விண்ணப்பிக்க தேவையில்லை. அந்த குறீயீட்டு எண்ணை தெரிவித்து தேர்வு எழுத உள்ளதை தெரிவித்தால் போதும். அவர்கள் தேர்வு எழுதலாம்.

* தேர்தல் வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டுப்போடும்போது வெப்கேமரா வைத்து கண்காணிப்பது போல அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வின்போது தேர்வு அறைகளில் வெப்கேமரா பொருத்தப்படும்.

* தேர்வாணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். கணினி மயமாக்கப்படும்.

     இவையெல்லாம் தேர்வாணையத்தின் தலைவராக நடராஜ் பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் அறிவித்தார். சமீபத்தில்  டி.என்.பி.எஸ்.சி.யில் கண்டுபிடிக்கப்பட்ட முறைகேடுகள், விதிமுறை மீறல்கள் இவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து இனிவரும் காலங்களில் எந்த ஒரு தேர்வுகளிலும் முறைகேடுகள் செய்யமுடியாத அளவிற்கு ஒரு சரியான திட்டமே புதிய தேர்வாணையத் தலைவர் அறிவித்துள்ள இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகும். இதுதான் பல ஆண்டுகளாக தமிழக இளைஞர்களும் பொது அறிவு உலகமும் டி.என்.பி.எஸ்.சி.யிடம் எதிர்பார்த்தது. 

       தமிழக பட்ஜெட் அறிவிப்பு முடிந்த  பின்னர் புதிய அறிவிப்புகளை எதிர் பார்க்கலாம். மற்றபடி தாமதமாகும் பணி நியமனங்கள், வெளியிடப்படாமல் உள்ள குரூப்-ஒ தேர்வு முடிவுகள் என அனைத்தும் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் பொருத்தே வெளிவரும். இதில் இந்த புதிய தலைவரும்கூட தலையிட இயலாது. அவரது பணி முழுவதும்  டி.என்.பி.எஸ்.சி. நேர்மையான தேர்வு நடத்துவதற்கு ஏதுவாக அறிவித்துள்ள சீர்திருத்த நடவடிக்கைகளை மேற் கொள்வதுதான். தமிழக அரசின்  அனுமதியுடன் குரூப்-ஒ, ஒஒ, ஒய தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு, தேர்வுகளை நடத்தி முடிப்பது. ஆண்டறிக்கையை தயார் செய்து சட்டமன்றத்தில் சமப்பிப்பது. அனைத்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான பாடத் திட்டம் மற்றும் வினாக்களை வடிவமைப்பது. அதாவது புதிய மாற்றங்கள் செய்வது போன்றவை ஆகும். அது இப்போது நிறைவேறுவது மிக்க மகிழ்ச்சி. இனிவரும் காலங்களில் நேர்மையான டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை  எதிர்பார்க்கலாம். தேர்வாணைய வரலாற்றிலேயே இரண்டு நேர்மையான அதிகாரிகள் (ஆர். நடராஜ் ஐ.பி.எஸ்., உதய சந்திரன் ஐ.ஏ.எஸ்.) பல சிறப்பான மாற்றங் களையும், படிப்பு  ஒன்றே மூலதனமாக கொண்ட இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு களையும் ஏற்படுத்தித் தர உள்ளனர். நல்ல சூழல் உருவாகியுள்ளது. அதனால் நம்பிக்கையுடன் படியுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்!  
                                                            நன்றி: பொது அறிவு உலகம்.

Saturday 11 February 2012

TRB தகுதித் தேர்வுக்கு தடை இல்லை

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
 


     சென்னை, பிப். 10: பள்ளி ஆசிரியர்களை நியமிக்கும் முன் அவர்களுக்குத் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணைக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி ஆசிரியர் நியமனத்தின்போது தகுதித் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆசிரியர் பணியில் சேர விரும்புபவர்கள் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த நவம்பர் 15-ம் தேதி தமிழக அரசின் கல்வித் துறை அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு சங்கம் சார்பில் அதன் செயலாளர் முருகதாஸ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
   பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஏற்கெனவே நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்கு எங்கள் சங்க உறுப்பினர்களில் 27 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் ஏற்கெனவே பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களும் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம் என்று இப்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் முடிந்த நிலையில் மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று கூறுவது சட்ட விரோதமாகும். ஆகவே, எங்கள் சங்க உறுப்பினர்கள் 27 பேரை தகுதித் தேர்வு எழுத நிர்பந்திக்கும் அரசாணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சந்துரு, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். 
 
அவரது தீர்ப்பு விவரம்: பணி நியமனம் தொடர்பாக நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தை அமல்படுத்துவதைத் தவிர மாநில அரசுக்கு வேறு வழியில்லை. கல்லூரிப் பேராசிரியர்கள் நியமனத்தில் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மற்றும் மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகளை யு.ஜி.சி. நடத்தி வருகிறது. இவ்வாறு தேர்வு நடத்துவது சரியே என்று உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.தமிழகம் முழுவதும் காளான்கள் முளைப்பதைப் போல ஏராளமான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தோன்றியுள்ள சூழ்நிலையில் ஆசிரியர் தேர்வில் தரத்தை உறுதிப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆகவே, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பான தமிழக அரசின் அரசாணை சரியானதே. மேலும், பணி நியமன தேர்வுப் பட்டியலில் இடம்பெற்ற காரணத்தாலேயே ஒருவர் பணியில் நியமிக்கப்பட்டதற்கான உரிமையைக் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட தேர்வு முறையில் நியமனம் நடைபெற வேண்டிய சூழலில், ஏற்கெனவே நடைபெற்ற தேர்வை அரசு ரத்து செய்தால் அது பற்றிக் கேள்வி எழுப்ப முடியாது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதை அரசாணை தெளிவுபடுத்துகிறது. அந்தச் சட்டத்தின்படி செயல்பட வேண்டியது மாநில அரசின் கடமையாகும். ஆகவே, அரசாணைக்கு எதிரான இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

TRB - AEEO தேர்வெழுத 66,957 பேர் தகுதி

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி: தேர்வெழுத 66,957 பேர் தகுதி

         சென்னை, பிப்.10: தமிழகம் முழுவதும் 34 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு எழுத 66,957 பேர் தகுதி பெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://trb.tn.nic.in  என்ற இணையதளத்தில் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண்ணைக் கொண்டு இந்தத் தேர்வுக்குத் தகுதியுள்ளதா என்பதை அறிந்துகொள்ளலாம். தமிழகம் முழுவதும் 34 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. மொத்தம் 34 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு சுமார் 68,500 பேர் விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தேதி முதல் இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன. பரிசீலனையில் சுமார் 1,500 பேர் இந்தத் தேர்வு எழுதுவதற்கான தகுதியைப் பெறவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, 66,957 பேர் இந்தத் தேர்வு எழுதத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, அந்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தகுதி பெறாதவர்களுக்கு, அவர்கள் ஏன் தகுதி பெறவில்லை என்றும் காரணமும் கூறப்பட்டுள்ளது. உதவி தொடக்கக் கல்வி அலுவலர் எழுத்துத் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, தகுதியுள்ள அனைவருக்கும் ஹால் டிக்கெட் அனுப்பப்பட உள்ளது.

Friday 10 February 2012

குரூப் 2 தேர்வு: உயர் நீதிமன்றம் மீண்டும் ஆணை

 வெற்றி பெற்றவர்களுக்கு 10 நாள்களுக்குள் பணி நியமன ஆணை: உயர் நீதிமன்றம்
  
                    சென்னை, பிப். 9: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 10 நாள்களுக்குள் பணி நியமன ஆணை அனுப்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



      வருவாய் ஆய்வாளர், சார்பதிவாளர், உதவிப் பிரிவு அலுவலர், நகராட்சி ஆணையர், உதவி வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டது.அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாவட்ட வாரியாக பணியிடம் ஒதுக்கி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்வாணையம் அறிவித்தது. எனினும், பணிகள் ஒதுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை அனுப்பப்படவில்லை என்று கூறி எம். குமாரவேலு, வி. பாலமுருகன், பி. குருநாதன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சுகுணா, பணிகள் ஒதுக்கப்பட்டவர்களுக்கு 6 வாரங்களுக்குள் பணி நியமன ஆணையை அனுப்ப வேண்டும் என்று கடந்த டிசம்பர் 22-ம் தேதி உத்தரவிட்டார்.
         இந்நிலையில் இந்த உத்தரவில் சற்று மாற்றம் செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய நிர்வாகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே, பணி நியமனம் என்பது இந்த விசாரணையின் முடிவுக்கு கட்டுப்பட்டது என்ற நிபந்தனையை உத்தரவில் சேர்க்க வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.இந்த மனு, நீதிபதி சுகுணா முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு குறிப்பிடும் நிபந்தனையை சேர்க்க அனுமதித்த நீதிபதி, பணி நியமன ஆணையை இன்னும் 10 நாள்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tuesday 7 February 2012

TNPSC:கலந்தாய்வு மூலம் பணி ஒதுக்கீடு

டி.என்.பி.எஸ்.சி.யில் முதல் முறை




இளநிலை உதவியாளர்கள் 1044 பேரை நிரந்தரப்படுத்த, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் திங்கள்கிழமை தொடங்கிய கலந்தாய்வு. 
       சென்னை, பிப். 6: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.) முதல் முறையாக கலந்தாய்வு மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இளநிலை உதவியாளர்கள் 1,044 பேருக்கு கலந்தாய்வு நடத்தி அவர்களுக்கான மாவட்ட பணியிட ஒதுக்கீடு வழங்கும் நிகழ்வை திங்கள்கிழமை தொடங்கி வைத்தார் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நடராஜ். இந்த கலந்தாய்வு ஒருவார காலம் நடைபெற உள்ளது.தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து, அரசுப் பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க சுமார் 15 ஆயிரம் பேர் தாற்காலிக அடிப்படையில் அரசுப் பணியில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் இளநிலை உதவியாளர் நிலையில் பணியில் சேர்ந்தனர். அரசு ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு தாற்காலிக பணியாளர்களின் நிலைமை கேள்விக் குறியானது. அவர்கள் தாற்காலிக நிலையிலேயே தொடர்ந்து பணியாற்றி வந்தனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் அந்த நிலையே தொடர்ந்தது.தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி தாற்காலிகப் பணியாளர்கள் 15 ஆயிரம் பேர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களை நிரந்தரப்படுத்த 2008-ம் ஆண்டு சிறப்பு போட்டித் தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது. 
 
படிப்படியாக நிரந்தரம்
 
   300 மதிப்பெண்கள் கொண்ட அந்தத் தேர்வில் பொது அறிவை அடிப்படையாகக் கொண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு முதலில் பணி நிரந்தரம் செய்யும் பணிகள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடைபெற்றது. 5 கட்டங்களாக நடந்த பணிநிரந்தரம் செய்யும் நடவடிக்கையில் 9,885 இளநிலை உதவியாளர்களுக்கு மாவட்ட அளவிலான பணியிட ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து, மீதியுள்ள 1,044 பேருக்கு பணி நிரந்தரம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின.கலந்தாய்வு மூலம்: பணி நிரந்தரம் செய்யும்போது அவர்கள் விரும்பும் இடங்கள் குறித்து கருத்துக் கோரப்பட்டு கடிதம் அனுப்பப்படும். அதற்கு அவர்கள் பதில் கடிதம் அனுப்புவார்கள். இதன்பின், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து அவர்களுக்கு மாவட்ட அளவிலான பணியிட ஒதுக்கீட்டை வழங்க 3 மாதங்கள் வரை ஆகும்.ஆனால், கலந்தாய்வு மூலம் அவர்களுக்கு பணியிட ஒதுக்கீட்டை வழங்க டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நடராஜ் மற்றும் செயலாளர் உதயசந்திரன் ஆகியோர் முடிவு செய்தனர். இதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த சில நாள்களாக நடந்தன.ஒவ்வொரு மாவட்டத்திலும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, வகுப்பு வாரியாக அவர்களுக்கான இடங்கள் எத்தனை என்பன குறித்த விவரங்கள் கம்ப்யூட்டரில் தொகுக்கப்பட்டன. அரசுப் பணியாளர் தேர்வாணைய வளாகத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கியது.முதலில் வந்திருந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அதன்பின்பு, அவர்களின் விருப்ப மாவட்டங்கள் எவை என்பது குறித்து கேட்கப்பட்டது. இந்த கலந்தாய்வுக்கென 10-க்கும் மேற்பட்ட இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் விரும்பும் மாவட்டங்கள் ஒதுக்கப்பட்ட பிறகு, அங்கேயே அவர்களுக்கு அதற்கான ஒதுக்கீட்டு உத்தரவு வழங்கப்பட்டது.10-க்கும் மேற்பட்ட இந்த உத்தரவுகளை அளித்து, கலந்தாய்வை திங்கள்கிழமை தொடங்கி வைத்தார், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நடராஜ். இந்த கலந்தாய்வு ஒரு வார காலம் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
 
       இதுபோன்ற கலந்தாய்வின் மூலம் ஒளிவுமறைவற்ற தன்மையை டி.என்.பி.எஸ்.சி.க்குள் கொண்டு வர முடியும். முதல் நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். ஒரு வார காலத்துக்குள் 1,044 பேருக்கும் நடத்தப்பட்டு பணியிட ஒதுக்கீடுகள் வழங்கப்படும். இந்த ஒதுக்கீட்டை அவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அங்கு தான் அவர்களுக்கு பணிக்கான ஊதியம் மற்றும் இதர விவரங்கள் அச்சிடப்பட்டு பணிக்கான உத்தரவு வழங்கப்படும். அதுதான் முக்கியம்'' என்றார்.பணியிட ஒதுக்கீட்டில் சம்பந்தப்பட்டவரின் புகைப்படம், எந்தப் பணி, எந்த மாவட்டம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
 
கண்ணீருடன் நன்றி...
 
    வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட்டு தங்களது பணி நிரந்தரம் செய்யப்பட்டதால், இளநிலை உதவியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கோபிசெட்டிபாளையத்தில் இருந்த ராஜேந்திரன் என்பவர், தேர்வாணையத் தலைவர் நடராஜிடம் கண்ணீருடன் அழுது கையைப் பிடித்து நன்றி தெரிவித்தார். 'பல  ஆண்டுகளாக மாத ஊதியம் ரூ.5 ஆயிரத்தில் குடும்பத்தை நடத்தி வந்தேன். மிகவும் வறுமையில் வாடினேன். பணியை நிரந்தரம் செய்ய கடந்த காலங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை. இப்போது கலந்தாய்வு மூலம் நடத்தப்பட்டதால் விரும்பிய இடத்தில் பணியிடம் கிடைத்துள்ளது'' என்றார். விபத்தில் காயமடைந்த செம்பனார்கோவிலைச் சேர்ந்த தியாகராஜனுக்கு, தேர்வாணைய வளாகத்தில் அவர் இருந்த இடத்துக்கே சென்று பணியிட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.