Monday 10 December 2012

ஆன்-லைன் கலந்தாய்வு

6,592 ஆசிரியர்களுக்கு பணி நியமனம்


       ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் 6,592 புதிய பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது பணியிடங்களை ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்தனர். இவர்கள் அனைவரும் அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே பணியிடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.

     தங்களது மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாதவர்கள், வேறு மாவட்டங்களில் பணியாற்ற விரும்புபவர்கள் என மொத்தம் 2,035 பட்டதாரி ஆசிரியர்களுக்கு திங்கள்கிழமை காலை ஆன்-லைன் கலந்தாய்வு நடைபெறுகிறது. பணியிடங்களைத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் வரும் 13-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஞாயிறு, திங்கள்கிழமைகளில் ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

     மாநிலம் முழுவதும் 32 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கலந்தாய்வு தொடங்கியது. தருமபுரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும் அவர்களது சொந்த மாவட்டங்களிலேயே பணியிடங்களைத் தேர்வு செய்தனர்.

     சென்னையில் சாலை மறியல்: சென்னை மாவட்டத்தில் நடைபெறும் ஆன்-லைன் கலந்தாய்வில் 168 பட்டதாரி ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்க வந்தனர். சென்னை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எதுவும் இல்லை. அதனால், கலந்தாய்வுக்கு வந்த ஆசிரியர்களிடம், திங்கள்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை ஞாயிற்றுக்கிழமை மாலை வரை காத்திருந்த பின்னரே அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸôர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

     கவலைப்பட வேண்டாம்: பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கணிதப் பாடத்தைத் தவிர மீதமுள்ள அனைத்துப் பாடங்களிலும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகளவில் காலிப் பணியிடங்கள் உள்ளன. எனவே, சென்னையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் சென்னைக்கு அருகிலேயே பணியிடங்களைத் தேர்வு செய்யலாம். யாரும் கவலைப்பட வேண்டாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கணிதப் பாட ஆசிரியர்களுக்கு மட்டும் திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில்தான் காலிப்பணியிடங்கள் உள்ளதாகத் தெரிகிறது.

   இன்றும் வரலாம்: தவிர்க்க இயலாத காரணங்களால் ஆன்-லைன் கலந்தாய்வில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்க முடியாதவர்கள், திங்கள்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.