Sunday 26 August 2012

TET தேர்வில் "மைனஸ்' மதிப்பெண்

        டி.இ.டி., தேர்வு மிகக் கடினமாக இருந்ததாக, தேர்வர் பலர் புலம்பிய நிலையிலும், தேர்ச்சி பெற்ற 2,448 பேரில், 1,680 பெண்கள் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர். இதில், முதல் மற்றும் இரண்டாம் தேர்வில், முதல் மூன்று இடங்களை, ஒன்பது பேர் பிடித்தனர். இவர்களில், எட்டு பேர் பெண்கள்.
                                                                                                                                                                    டி.இ.டி., தேர்வில், கேள்வித்தாள் வரிசை எண்ணை, விடைத்தாளில் குறிப்பிடாதவருக்கு, ஐந்து மதிப்பெண்; முக்கிய பாடத்தை குறிப்பிடாதவருக்கு, மூன்று; மொழிப் பாடத்தை குறிப்பிடாதவருக்கு இரண்டு மதிப்பெண் என, தவறு செய்தவர்களை ஆறு வகையாகப் பிரித்து, அவர்களுக்கு, "மைனஸ்' மதிப்பெண்களை, டி.ஆர்.பி., வழங்கியுள்ளது.இதில் அதிகபட்சமாக, முதல் தாள் தேர்வில், 621 பேர்; இரண்டாம் தாளில், 731 பேர், கேள்வித்தாள் வரிசை எண்ணை எழுதவில்லை. இவர்கள் அனைவருக்கும், மதிப்பெண் குறைக்கப்பட்டது. கூடுதல் தவறு செய்தவருக்கு, அதற்கேற்ப மதிப்பெண் குறைக்கப்பட்டது என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன."மைனஸ்' மதிப்பெண் குறித்து கேட்டபோது, ""தேர்வர் செய்யும் தவறுகளுக்கு ஏற்ப, மதிப்பெண்களை குறைத்து வழங்க, டி.ஆர்.பி.,க்கு அதிகாரம் உள்ளது. அதன்படி தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்படிச் செய்தால் தான், வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடப்பதை தடுக்க முடியும்,'' என்றனர்.சாதாரண தகவல்களைக் கூட சரிவர பூர்த்தி செய்யாததால், பலர் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

         சென்னை, ஆக., 25 : தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வினை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. காலையில் முதல் தாளுக்கும், மதியம் இரண்டாம் தாளுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வினை 6 லட்சத்து 76 ஆயிரத்து 700 பேர் எழுதினார்கள்.
 
          இந்நிலையில், இத்தேர்வுகளுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டது. தேர்வு முடிவுகளை http://trb.tn.nic.in/TET2012/24082012/status.asp என்ற இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாளை இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 2,88,588 லட்சம் பேர் எழுதினர். இரண்டாம் தாளை பட்டதாரி ஆசிரியர்கள் 3,88,175 லட்சம் பேரும் எழுதினார்கள். இதில் 1, 735 பேர் முதல் தாளில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும்,   713 பேர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும். இரண்டு தாள்களையும் எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் 83 பேர். இதில் ஆண்கள் 768 பேர், பெண்கள் 1,680 பேர். மொத்த தேர்ச்சி விகிதம் 0.70 சதவிகிதமாகும் மட்டுமே என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

            உடுமலைப்பேட்டையை சேர்ந்த எம்.பிரியா முதல் தாளில் 122 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், நாகப்பட்டினம் மாவட்டம் ஆயக்காரன்புலம் பி.சித்ரா இரண்டாம் தாள் கணிதம் - அறிவியல் பாடத்தில் 142 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார். சமூக அறிவியல் பாடத்தில் கம்பத்தைச் சேர்ந்த அருள்வாணி 125 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
           மீண்டும் TET : இத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளதால் வெற்றிவாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் 3-ம் தேதி வெற்றி பெறாதவர்கள் அனைவருக்கும் மீண்டும் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வினை எழுத கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏற்கனவே விண்ணப்பித்து தேர்ச்சி பெறாதவர்கள் மட்டும் இந்த தேர்வினை எழுத முடியும். தேர்வு எழுதுபவர்களுக்கு விரைவில் ஹால் டிக்கெட் அனுப்படும். புதியதாக யாரும் விண்ணப்பிக்கவும் முடியாது.
      மதிப்பெண்ணில் 60% மதிப்பெண் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகவும், வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பதற்கு விரைவில் கடிதம் அனுப்பப்படும் என்றும், அக்டோபர் மாதம் நடைபெறும் தேர்விற்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Saturday 25 August 2012

ஆசிரியர் தகுதித்தேர்வு உணர்த்தும் உண்மைகள்



     அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் சுமார் 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ள நிலையின் மூலம் சில கற்பிதங்களையும், சில உண்மைகளையும், எதிர்காலத்தில் இத்தேர்வில் செய்யவேண்டிய மாற்றங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  இரண்டாயிரம் பேரைத் தவிர, தேர்ச்சி பெற முடியாமல்போன அனைவருமே "தகுதியற்றவர்கள்' என நாம் ஒட்டுமொத்தமாகக் கருதிவிட முடியாது.  முதலில், தேர்வு அறிவிக்கப்பட்ட நாளுக்கும் தேர்வு நடைபெற்ற நாளுக்கும் இடையில் போதிய கால அவகாசம் இல்லை. பெரும்பாலானோர் இந்தத் தேர்வு நடத்தப்படுமா என்ற சந்தேகத்திலேயே இருந்தனர்.  தகுதித் தேர்வுக்காகக் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அளவிற்கேற்ப அதற்குத் தயார்படுத்திக் கொள்வதற்கு அவகாசம் இல்லை.  முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் ஒரே காலகட்டத்தில் போட்டித் தேர்வையும், தகுதித் தேர்வையும் (டிஇடி) எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  இரண்டிற்குமான கால அவகாசம் பெரும்பாலானோர் கேட்டுக் கொண்ட பின்னரே (அதுவும் போட்டித்தேர்வு முடிந்த பிறகு) சற்று நீட்டிக்கப்பட்டாலும் அது போதாது என்பதே பலரது கருத்து.  இரண்டிற்குமான தேர்வு பாடத்திட்டம் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.  அதனால் இரு தேர்வுகளையும் எழுத வேண்டிய நிலையில் இருந்தவர்கள் எந்தத் தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பது என்று முடிவெடுப்பதே பெரும் சவாலாக இருந்தது.  

          சமூகப்பொறுப்பு சார்ந்த ஆசிரியர் பணி நியமனத்தில் பதிவு மூப்பா, தேர்வு முறையா என்பதில் ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் ஒவ்வொரு முடிவு எடுக்கப்பட்டு வருவதால், தேர்வுக்குத் தயாரான மன நிலையில் பெரும்பாலோர் இல்லை. பலர் பல்வேறு பயிற்சி நிறுவனங்களை நம்பி ஏமாந்தனர்.  கடந்த காலங்களில் ஏராளமான கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துவிட்டு அவை எந்த அளவுக்குத் தரமான கல்வியைத் தந்தன எனக் கண்காணிக்காமல் விட்டதன் நிலைதான் தகுதித் தேர்வு என்ற ஒரு தேர்வை நடத்த வேண்டிய நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.  பல தேர்வுக் கூடங்களில் தேர்வு நேரம் தொடங்கிய பிறகு நேர மேலாண்மையைப் பாதிக்கும் வகையில் தேர்வர்களிடம் கையொப்பம் வாங்குவது, தேர்வர்களின் சிந்தனையைத் திசை திருப்பும் வகையில் தேர்வு நேரம் தொடங்கிய சில நிமிடங்களுக்கும் முடிவதற்கு சில நிமிடங்கள் முன்னதாகவும் தொடர்ந்து ஒலி பெருக்கியில் அறிவிப்புகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தது போன்ற நிகழ்வுகளும் நடந்ததால் சில வினாக்களைத் தவற விட்டோம் என்றும் சிலர் தெரிவித்தனர்.  தேர்வுக்கான வினாக்கள் பெரும்பாலும் பாடங்களின் ஆழமான நிலைக்குச் சென்று அதிலிருந்து கேட்கப்பட்டிருந்தன. ஆனால், ஆசிரியர் தேர்வாணைய அதிகாரிகள் பங்கேற்ற ஒரு டி.வி. நிகழ்ச்சியில், "ஆசிரியராக வரக்கூடிய ஒருவருக்கு அடிப்படையாக சில தகுதிகள் இருக்கிறதா என்பதைச் சோதிக்கும் வகையிலேயே மேலோட்டமாக, சாதாரணமாகத்தான் வினாக்கள் இருக்கும். பெரிதாகப் பயந்துகொண்டு இருக்க வேண்டியதில்லை' என்று கூறினார்கள்.  ஆசிரியருக்கான தகுதியைச் சோதிக்கும் வகையிலான தேர்வில் வினாக்களும் அவர்கள் தகுதியைச் சோதிக்கும் வகையில் பொதுப்படையாக அமைக்கப்பட வேண்டும்.  அதன் மூலம் அவர் மாணவர்களை எவ்வாறு வழிநடத்துவார், எப்படிப் பாடங்களைக் கற்பிப்பார், என்ன மாதிரியான உளவியலைப் பயன்படுத்துவார், எப்படிப்பட்ட பண்பு நலன்கள் ஆசிரியரிடம் இருக்க வேண்டும் என்பன போன்றவற்றை அறிகின்ற வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டால்தான், அதைத் தகுதித் தேர்வு என அழைக்க முடியும்.  மாறாக போட்டித் தேர்வுகளுக்குக் கேட்கப்படுவது போன்றே ஒரு பாடத்தைப் படித்து நினைவில் நிறுத்தி, அதிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒரு வார்த்தையில் பதிலளிப்பது போன்றே அமையுமானால் அதைப் போட்டித்தேர்வு என்றே அழைத்து விடலாம்.  ஆசிரியர் பணிக்கான படிப்புகளை சில ஆண்டுகளுக்கு முன்னரே படித்து முடித்துவிட்டு, பணி கிடைக்கும் வரை வேறு வேலைகள் செய்து கொண்டிருக்கும் நிலையிலும், பாடங்களுடன் சற்று தொடர்பு விடுபட்டிருக்கும் நிலையிலும் உள்ளவர்களுக்கு இதுபோன்ற கேள்விகளுக்கு தேர்வுக்கான போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் உடனடியாகப் பதிலளிக்க முடியாது.  கல்வியியல் கல்லூரிகளில் பள்ளிகளில் உள்ள பாடங்கள் சொல்லித் தரப்படுவதில்லை. கற்பித்தல் முறைகள், உளவியல் முறைகள், மாணவர்களைக் கையாளும் முறைகள், ஆசிரியருக்கான தகுதிகள் போன்ற வகையிலான பாடத் திட்டங்களே அமைக்கப்பட்டுள்ளன.  ஆகையால் தகுதித்தேர்வுக்கான வினாக்களும் ஆசிரியரின் பண்பு நலன்களை, தகுதியை வெளிக் கொண்டுவரும் வகையிலும், கூடவே பாடம் சார்ந்த வினாக்களும் இடம்பெறும் வகையில் அமைக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் விரிவாக விடையளிக்கும் அமைப்பில்கூட வினாக்களை அமைக்கலாம்.

Saturday 11 August 2012

செவ்வாய் கிரகத்தில் "ரோவர்' விண்கலம்

     வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட "ரோவர்' விண்கலம், எட்டு மாதப் பயணத்துக்கு பின், நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது.

சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த செவ்வாய் கிரகம், பூமியிலிருந்து 57 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. இந்த சிவப்பு நிற கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் குறித்து, அமெரிக்காவின் "நாசா' விஞ்ஞானிகள், பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஆராய, சில விண்கலங்கள் அனுப்பப்பட்டன. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக, சில தடயங்கள் கிடைத்தன.

"கியூரியாசிட்டி': இந்த கிரகத்தைப் பற்றி மேலும் ஆராய, கடந்த நவம்பர் மாதம், "ரோவர்' விண்கலம் செலுத்தப்பட்டது; 250 கோடி டாலர் செலவில் இந்த விண்கலம் தயாரித்து, செவ்வாய் கிரகத்தில் நேற்று தரையிறங்கியது. "ரோவர்' விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த, "கியூரியாசிட்டி' என்ற "ரோபோ' வாகனம், செவ்வாயின் நிலப்பரப்பில், நேற்று காலை, இறக்கி விடப்பட்டது. "பாராசூட்' மூலம் மெதுவாக, செவ்வாயின் புவி பரப்பைத் தொட்ட, "கியூரியாசிட்டி', தரையிறங்கியதற்கு ஆதாரமாக, சில படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.

மகிழ்ச்சி: ரோவர் விண்கலம் தொடர்பாக, 10 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த "நாசா' விஞ்ஞானிகள், "கியூரியாசிட்டி' செவ்வாயில் இறங்கியதும், கட்டுப்பாட்டறையில் இருந்தபடி, ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

96 மைல் பரப்பளவு: ஆறு சக்கரங்களுடன் கூடிய, "கியூரியாசிட்டி' "ரோபோ' வாகனத்தில், செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல், மண் அமைப்பு உள்ளிட்டவை ஆராயக்கூடிய வசதி உள்ளது. செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஓரளவு புரிந்து கொண்ட பின், ஒரு மாதம் கழித்து, "கேலே' பள்ளத்தாக்கில் தரையிறங்கியுள்ள "கியூரியாசிட்டி' ஆய்வுகளை துவங்கும். செவ்வாய் கிரகத்தில் 96 மைல் பரப்பளவில் சுற்றி வந்து, "கியூரியாசிட்டி' ஆய்வுகளைச் செய்யும். புளூடோனியம் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பேட்டரி, இந்த ரோபோவில் உள்ளது. "கியூரியாசிட்டி'யுடன் இணைக்கப்பட்டுள்ள ஆன்டெனா, ஸ்கேனர் கருவிகள், ஒரு வாரத்துக்கு பிறகு செயல்பாட்டுக்கு வர உள்ளன.

நேரடி ஒளிபரப்பு: ரோவர் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கும் நிகழ்ச்சி, நியூயார்க்கின், "டைம்ஸ்' சதுக்கத்தில், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ""ஓரிரு நாட்களில் "ரோவர்' விண்கலத்திலிருந்து துல்லியமான படங்கள் கிடைக்கும்,'' என, "நாசா' மைய தலைமை இன்ஜினியர் ராபர்ட் மேனிங் தெரிவித்துள்ளார்.

அமிதாப் கோஷ்: ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய நாசா விஞ்ஞானிகள் குழுவில் இந்தியர் அமிதாப் கோஷும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNTET தேர்வில் 2 ஆயிரம் பேர் தேர்ச்சி!

ஆசிரியர் தகுதித் தேர்வில் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி!

       ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு தாளிலும் 150-க்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும்.  மொத்தமாக 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக தமிழக அரசிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை நடத்தும் எனத் தெரிகிறது.  இந்தத் தேர்வின் அடிப்படையில் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.  இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பணியில் சேரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனமும், இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு பேரவையில் அறிவித்துள்ளது.

         ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தமிழகம் முழுவதும் 1,072 மையங்களில் இந்தத் தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற்றது. 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வில் பங்கேற்றனர்.  இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளை 2.5 லட்சம் பேரும், இரண்டாம் தாளை சுமார் 4 லட்சம் பேரும் எழுதினர். இதில் 55 ஆயிரம் பேர் இரண்டு தாள்களையும் எழுதினர்.  ஒவ்வொரு தாளிலும் அப்ஜெக்டிவ் வடிவில் 150 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் இடம்பெற்றிருந்தன. கேள்விகளுக்கு விடையளிக்க ஒன்றரை மணி நேரம் வழங்கப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும்.  இந்த இரண்டு விடைத்தாள்களும் மிகவும் கடினமாக இருந்ததாகத் தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். கணிதப் பாட வினாக்களுக்கு விடையளிக்க நேரம் போதவில்லை என்றும் பரவலாகப் புகார் தெரிவித்தனர்.  இந்த விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டன. முக்கிய விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, தேர்வர்களிடம் இருந்த பெறப்பட்ட ஆட்சேபங்கள் இறுதிசெய்யப்பட்டு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

  5 சதவீதம் கூட தேர்ச்சியில்லை: 
          விடைத்தாள் மதிப்பீட்டுக்குப் பிறகு, இரண்டு தாள்களையும் சேர்த்து சுமார் 2,000 பேர்  மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய சராசரியான 5 சதவீத அளவுக்குக் கூட தேர்வர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து, தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.  தள்ளிப்போகும்?: இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் வாரம் விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கு விசாரணை, தேர்வு மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பான ஆலோசனை போன்ற காரணங்களாலும், தேர்வர்களின் தவறுகளை சரிசெய்ய அவகாசம் தேவைப்படுவதாலும் தேர்வு முடிவுகளை வெளியிடுவது சில வாரங்கள் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.  இந்தத் தேர்வில் தேர்ச்சியடையாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு தேர்வு நடத்தும் யோசனையும் பரிசீலனையில் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.