Wednesday 4 January 2012

TNPSC - புதிய அறிவிப்புகள் எப்போது?


எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள்!

         டி,என்.பி.எஸ்.சி. முடக்கப்பட்டுவிட்டது. இனி எந்த தேர்வுக்கான அறிவிப்பும் வெளிவராது என பரவலாக பேசப்படுகிறது. அது உண்மையல்ல. வழக்கு முடிந்ததும் புதிய தேர்வுக்கான அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். இதை உறுதிபடுத்த, ஜெயலலிதா முதல்வரான பின்னர் அமைச்சரவையில் அளிக்கப்பட்ட அறிக்கையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. பற்றிய விவரத்தை இங்கு அப்படியே தருகிறேன்.

"தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தன்னாட்சி அமைப்புடன் தனது பணிகளைச் சுயமாகவும், நேர்மை யாகவும், பாகுபாடின்றியும் செயல்படுத்தும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுக் கூறு 315(1)-ன் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வாணையம், தலைவர் மற்றும் பதினான்கு உறுப்பினர்களைக் கொண்டதாகும். இத்தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரின் பணி நிலைகள், 1954-ஆம் ஆண்டைய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டவையாகும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுக் கூறு 320-ல் கூறப்பட்டுள்ள கீழ்க்கண்ட கடமைகள் மற்றும் அலுவல் பணிகளை மேற்கொண்டு வருகிறது:-

(1) பணியாளர்களைத் தெரிவு செய்தலே இதன் தலையாய பணியாகும்;

(2) பணியாளர்களைத் தெரிவு செய்தல் பற்றிய விதிகள் இயற்றுவது, பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுகள் அளித்தல், ஒரு பணியிலிருந்து மற்றொரு பணிக்கு மாற்றல் செய்தல் ஆகியவற்றில் பின்பற்றப்பட வேண்டிய நெறிகள், அரசுப் பணியாளர்களின் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மீதான மேல்முறையீடு குறித்த அனைத்து தேர்வு களிலும் அரசுக்கு ஆலோசனை வழங்குதல்;

(3) அரசுப் பணியாளர்களுக்கான துறைத் தேர்வுகளை நடத்துதல்;

(4) டேராடூன் இந்திய இராணுவக் கல்லூரி நுழைவுத் தேர்வுகளை ஆண்டிற்கு இருமுறை, மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பாக நடத்துதல்.

01.04.2010 முதல் 31.03.2011 வரையுள்ள காலத்தில், 63 வகையான பணியிடங்களில் 9,183 காலிப் பணியிடங்களுக்கு 12 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. இக்காலிப் பணியிடங்களுக்கு 16,84,745 விண்ணப்பங்கள் பெறப்பட்டன அக்காலத்தில், 12 பதவி இனங்களுக்கு இறுதித் தெரிவு முடிவுகள் வெளியிடப்பட்டு, 3,512 நபர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அத் தெரிவுப் பட்டியல்கள் தொடர்புடைய துறைகளுக்கு பணிநியமனம் வழங்க அனுப்பப் பட்டன. அக்காலத்தில் மாநிலப்பணிகளில் தொடர்புடைய சார்நிலைப் பணிகளிலிருந்து பணிமாறுதல் மூலம் தெரிவு செய்தல், மாநிலப் பணிகளிலேயே பதவி உயர்வு வழங்குதல் ஆகிய பொருள் குறித்த அரசின் கருத்துருக்கள், துறைத்தேர்வுக்குழுவால் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு 1,165 அலுவலர்கள் பதவி உயர்வு பெறப் பரிந்துரை செய்யப்பட்டனர். ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான பொருட்கள் மற்றும் பல்வேறு பணிகளில் வகைப்படுத்தப்பட்டுள்ள பணியிடங்களுக்குத் தற்காலிக/சிறப்பு விதிகளை உருவாக்குதல் மற்றும் அவற்றிற்கான திருத்தங்கள் வெளியிடுதல் தொடர்பாக அரசு அனுப்பும் கருத்துருக்களில் தேர்வாணையம் தனது கருத்தைத் தெரிவிக்கிறது. மேலும், தேர்வாணை யத்தால் தெரிவு செய்யப்படாத இனங்களில் துறைத்தலைவர்களாலும், அரசாலும் பணி யமர்த்தம் செய்யப்பட்ட இனங்களுக்கு இசை வளிக்கிறது. அரசுப் பணியாளர்களுக்கான துறைத்தேர்வுகளையும் நடத்துகிறது.

2011- 12 -ஆம் ஆண்டில், தொகுதி-1க்கான பூர்வாங்கத் தேர்வு 2011, ஜூன் மாதமும், அவ்வாண்டிற்கான ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகள் தேர்வு-1க்கான தேர்வு 2011, ஜூலை மாதமும் நடைபெற்றன. மேலும், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் உரிமையியல் நடுவர், செயல் அலுவலர் நிலை-1, நிலை-111 மற்றும் நிலை-4 ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுகள், புள்ளியல் ஆய்வாளர், உதவிப் புள்ளியல் ஆய்வாளர், இளநிலைப் பகுப்பாய்வாளர், பீனைல் உதவியாளர், மண்ணியல் உதவியாளர் ஆகிய பதவிகளுக்கும், தொகுதி-1, ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்-1, ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்-11 மற்றும் தொகுதி-4 இல் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு களுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட உள்ளன.

கிராம நிர்வாக அலுவலர் பணி யிடத்திலுள்ள 3,484 காலிப்பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட போட்டித் தேர்வில், பணியிடங்களுக்கான முடிவுகள் வெளியிடப் பட்டன. ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு-1ல் அடங்கியுள்ள 1,628 காலியிடங் களுக்கான தெரிவுப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

தற்போது, தேர்வாணைய அலுவலகம், வணிகவரி அலுவலக இணைப்புக் கட்டடம், கிரீம்ஸ் சாலை, கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கிராமம் மற்றும் அரசினர் தோட்டத்திலுள்ள இராஜாஜி மண்டபம் ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வருகின்றது. தேர்வாணைய அலுவலகத்திற்கென ஒரு சொந்த அலுவலகக் கட்டடம், சென்னை எம்.யூ.சி திடலில் கட்டப்பட்டு வருகின்றது' ஆக புதிய எழுச்சியுடன் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை ஜெயலலிதா அரசு நடத்த உள்ளது  என்பதை அதிமுக அமைச்சரவையின் அறிக்கையிலிருந்து தெரியவருகிறது. அதனால் நம்பிக்கையுடன் இருங்கள்.  புதிய அறிவிப்புகள் வெளிவரும்.

* TNPSC குரூப் I தேர்வு

டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் I தேர்வு மூலம் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரி அலுவலர், மாவட்டப் பதிவாளர், கோட்ட வளர்ச்சி அலுவலர், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலர், கோட்ட தீயணைப்பு அலுவலர் போன்ற உயர் பணிகளுக்கான தகுதிவாய்ந்த நபர்களை தேர்ந்தெடுக்கின்றது. இத்தேர்வினை எழுத ஏதேனும் ஓர் பட்டப்படிப்பு  போதுமானது. குறைந்த பட்சம் 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிக பட்ச வயது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அட்டவணை வகுப்பினர், அட்டவணை பழங்குடியினர் ஆகியோருக்கு 35 வயது. இதர வகுப்பினருக்கு 30 வயது ஆகும். இத்தேர்வானது மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது. அவை 1. முதல்நிலைத் தேர்வு, 2.முதன்மைத் தேர்வு, 3. நேர்முகத் தேர்வு ஆகும். முதல்நிலைத் தேர்வு எழுதுபவர்களில் முதன்மைத் தேர்வுக்கு 1:10 என்ற விகிதத்தில் தேர்ந்தெடுக்கப்படுவர். முதன்மைத் தேர்வு எழுதுபவர்களில் 1:2 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

* TNPSC  குரூப் II தேர்வு

டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப்-II தேர்வானது ஒருங்கிணைந்த சார்நிலைப் பணி-I எனப்படுகிறது. இந்த தேர்வின் மூலம் தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு   அலுவலர்  (ASO) வருவாய்த் துறையில் உதவியாளர், இந்து சமய அறநிலையத் துறையில் உதவி தணிக்கை ஆய்வாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் தரம்-2, உள்ளாட்சி தணிக்கைத் துறையில் உதவி ஆய்வாளர், சார்பதிவாளர் தரம்-2, உதவி வணிக வரி அலுவலர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர். இத்தேர்வை பட்டப்படிப்பை முடித்தவர் யாரும் எழுதலாம். இத்தேர்விற்கான கல்வி தகுதியானது குறைந்தபட்ச பட்சம் 18 வயது பூர்த்தியாயிருக்க வேண்டும். சார்பதிவாளர் (நிலை-II) பதவிக்கு 20 வயது பூர்த்தியாயிருக்க வேண்டும். அதிக பட்ச வயது: பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,  அட்டவணை வகுப்பினர், அட்டவணை பழங் குடியினர் ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. ஆனாலும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் நன்னடத்தை அலுவலர் ஆகிய பதவிகளுக்கு 40 வயது பூர்த்தி யாகியிருக்கக்கூடாது இதர வகுப்பினருக்கு அனைத்துப் பணியிடங்களுக்கும் உச்சவயது 30 ஆகும். இந்த தேர்வானது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.

* TNPSC  குரூப் IV தேர்வு

டி.என்பிஎஸ்.சி நடத்தும் குரூப்- IV தேர்வானது இளநிலை உதவியாளர், சர்வேயர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் தரம்-3 ஆகிய பணிகளுக்காக நடத்தப்படுகிறது. இதற்கான கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு என்று பார்த்தால் இள நிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர், சர்வேயர் ஆகிய பணியிடங்களுக்கு குறைந்தபட்ச வயது 18. அதிகபட்ச வயது 30 ஆகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அட்டவணை வகுப்பினர், அட்டவணை பழங்குடியினர் ஆகியோருக்கு உச்சவயது வரம்பு இல்லை.

* இந்து சமய அறநிலையத்துறை பணிகள்

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை பணிகளுக்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி தொடர்ந்து அவ்வப்போது நடத்தி வருகிறது. அவற்றில் முக்கியமான தேர்வுகள் 1. டி.என்.பி.எஸ்.சி குரூப் I B  தேர்வு, 2. டி.என்.பி.எஸ்.சி குரூப் IV  (நிர்வாக அலுவலர் தரம் - I) தேர்வு, 3. டி.என்.பி.எஸ்.சி குரூப் VII தேர்வு, 4.டி.என்.பி.எஸ்.சி குரூப் VIII தேர்வு ஆகியவை நடத்தப்படுகின்றன.

* டி.என்.பி.எஸ்.சி குரூப்-I B  தேர்வானது இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையர் பதவிக்காக நடத்தப்படுகிறது. இதற்கான கல்வித் தகுதி ஏதேனும் ஓர் பட்டப்படிப்பு மற்றும் சட்ட படிப்பு ஆகும். வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியாயிருக்க வேண்டும். அதிகபட்ச வயது 32 ஆகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அட்ட வணை வகுப்பினர், அட்டவணை பழங்குடி யினர் ஆகியோருக்கு 37 வயது இதற்கான எழுத்து தேர்வு தாள்1 பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்கள். பொது அறிவு 100 வினாக்கள் தாள் 2 இல் இந்து சமய 100 வினாக்கள், சட்டப் பாடத்தில் 100 வினாக்கள் கேட்கப்படும் ஒரே நாளில் இரண்டு தேர்வுகளாக காலையும் மாலையும் நடத்தப்படும்.

* டி.என்.பி.எஸ்.சி குரூப் VII-A தேர்வில் ஒன்று இந்து சமய அறநிலையத் துறையில் நிர்வாக அலுவலர் தரம்-I பதவிக்காக நடத்தப்படுகிறது. இத்தேர்விற்கான கல்வித் தகுதி ஏதேனும் ஓர் பட்டப்படிப்பு மற்றும் சட்டப்படிப்பு. வயது வரம்பு: குறைந்த பட்ச வயது 25, அதிகபட்ச வயது 35. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அட்டவணை வகுப்பினர், அட்ட வணை பழங்குடியினர் ஆகியோருக்கு உச்சவயது வரம்பு இல்லை. இத்தேர்விற்கான தேர்வு முறை தாள் 1-இல் பொது அறிவு மற்றும் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம், தாள் 2 இல் இந்து சமய வினாக்கள் மற்றும் சட்டம் வினாக்கள் இடம்பெறும்.  அடுத்து நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.

* டி.என்.பி.எஸ்.சி குரூப் VII-B  தேர்வில் இரண்டாவது இந்த சமய அறநிலையத் துறையில் நிர்வாக அலுவலர் தரம்-III பதவிக்காக நடத்தப்படுகிறது. இத்தேர்விற்கான கல்வித் தகுதி ஏதேனும் ஓர் பட்டப்படிப்பு வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 25. அதிக பட்ச வயது 35. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,  அட்டவணை வகுப்பினர், அட்டவணை பழங்குடியினர் ஆகியோருக்கு உச்சவயது வரம்பு இல்லை. இத்தேர்வுக்கான எழுத்துத் தேர்வு தாள் 1-இல் பொது அறிவு மற்றும் பொதுத்தமிழ், தாள் 2-இல் இந்து சமய இணைப்பு விளக்கம் மற்றும் சைவமும் வைணவமும். எழுத்துத் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப் படுகிறது.

* டி.என்.பி.எஸ்.சி குரூப் VIII  தேர்வானது இந்து சமய அறநிலைத்துறையில் நிர்வாக அலுவலர் தரம் -IV பணிக்காக நடத்தப்படுகிறது. இத்தேர்விற்கான கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே. வயது வரம்பு: குறைந்த பட்ச வயது 25 அதிகபட்ச வயது 35 ஆகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அட்டவணை வகுப்பினர், அட்டவணை பழங்குடியினர் ஆகியோருக்கு உச்சவயது வரம்பு இல்லை. இதற்கான எழுத்து தேர்வு முறையானது. தாள் 1-இல் பொது அறிவு மற்றும் பொதுத்தமிழ், தாள் ஒஒ-இல் இந்து சமய இணைப்பு விளக்கம் மற்றும் சைவமும் வைணவமும். அடுத்து இதற்கான நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.

* தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி (புள்ளியல் துறை) தேர்வானது, உதவி புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்காக நடத்தப்படுகிறது. இத்தேர்வினை கணிதம் அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் எழுதலாம். இத்தேர்விற்கான குறைந்தபட்ச வயது 20. அதிகபட்ச வயது 30 ஆகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அட்டவணை வகுப்பினர், அட்டவணை பழங்குடியினர் ஆகியோருக்கு உச்சவயது வரம்பு இல்லை. எழுத்து தேர்வு (விண்ணப்பதாரால் தேர்வு செய்யப்படும் கணிதம் அல்லது புள்ளியியல் அல்லது பொருளாதாரப் பாடத்தில்) 200 கேள்விகள் கேட்கப்படும். இதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.

- எஸ். செல்வராஜ்           















No comments:

Post a Comment