Monday 30 January 2012

TNPSC -யில் குறை தீர்வு மையம்

  TNPSC -யில் குறை தீர்வு மையம்


         தேர்வெழுதுபவர்களுக்காகவும், பொது மக்களுக்காகவும், டி.என்.பி.எஸ்.சி. தலைமையகத்தில் ஒரு குறைதீர்ப்பு மையம் திறக்கப்படும் என்று அதன் தலைவர் திரு.நடராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த மையத்தில், சம்பந்தப்பட்டவர்கள் தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 24ம் தேதி TNPSC தலைவராக பதவியேற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி ஆர்.நடராஜ், TNPSC தலைவர் என்ற முறையில் தனது திட்டங்கள் குறித்து கூறியதாவது, "இந்த மையமானது, சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகுந்த நன்மையை அளிக்கும். TNPSC -ல் பலவிதமான பணிகளுக்காக விண்ணப்பிக்கும் லட்சக்கணக்கான மக்களுடன், TNPSC அதிகாரிகள் தொடர்புகொள்ளும் வகையில் எந்தவிதமான வசதியோ, திட்டமோ அல்லது செயல்முறையோ தற்போது கிடையாது.
TNPSC நடைமுறைகள் வெளிப்படையாக இருந்தால் மக்களுக்கு இதன்மீது அதிக நம்பிக்கைப் பிறக்கும். இந்த கமிஷனுக்கு ஆதரவளிப்பவர்களாகவும், அதன் வெற்றிக்கு முதுகெலும்பாகவும் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில், TNPSC பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும்.
குறைதீர்ப்பு மையம் கூடிய விரைவில் திறக்கப்படுவதோடு, வேறுவிதமான பயன்மிகு முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும் நான் திட்டமிட்டு வருகிறேன்", என்றார்.

   அதன்படி விண்ணப்பதாரர்களின் குறையைத் தீர்க்க தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தில் தங்களுக்குத் தேவையான தகவல்களை அவர்கள் நேரடியாகவோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சல் மூலமாகவோ, தபால் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.  தேர்வாணைய அலுவலகத்தில் நேரடியாக வரும் விண்ணப்பதாரர்களின் மனுக்கள் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பெறப்படும். அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, அன்று மாலை 4 முதல் 5.30 மணி வரை தகவல் தெரிவிக்கப்படும். தேர்வாணைய அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக கோரப்படும் தகவல்கள் யாவும் தொடர்புடைய பிரிவுகளால் பரிசீலிக்கப்படும். இதுகுறித்த தகவல்களை 24 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தொலைபேசி வாயிலாக குறை தீர்ப்பு மையத்தை அணுகி, தேவையான தகவல்களைப் பெறலாம். இதற்காக தமிழகத்தின் எந்தவொரு பகுதியிலிருந்தும் தொடர்புகொள்ள 18004251002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.  contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தகவல்களைக் கோரிப் பெறலாம். மின்னஞ்சல் மூலமாகப் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் தகவல் அனுப்பப்படும். தபால் மூலம் தகவல்களைக் கோர வேண்டிய முகவரி: செயலாளர், குறை தீர்ப்பு மையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 1, கிரீம்ஸ் சாலை, சென்னை - 600006.  தபால் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் உரிய துறைகள் மூலம் பரிசீலிக்கப்பட்டு, தகவல்கள் 7 வேலை நாட்களில் அனுப்பப்படும்


No comments:

Post a Comment