Tuesday 13 March 2012

VAO பணி:ஓரிரு நாள்களில் உத்தரவு

வி.ஏ.ஓ.க்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு: ஓரிரு நாள்களில் உத்தரவுகளை அளிக்க நடவடிக்கை

  புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணியிடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.  அதற்கான உத்தரவுகள் ஓரிரு நாள்களில் வழங்கப்படும் என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  தமிழகம் முழுவதும் காலியாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்றது. பொதுப்பிரிவில் காலியாக இருந்த 2 ஆயிரத்து 407 பணியிடங்களுக்கும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் ஆயிரத்து 77 இடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் பங்கேற்க 10 லட்சத்து 44 ஆயிரத்து 119 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அதில், 85 ஆயிரத்து 384 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ளவர்களில் 7 லட்சத்து 76 ஆயிரத்து 156 பேர் தேர்வினை எழுதினர்.  முடிவுகள் வெளியீடு: பொதுப் பிரிவினருக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு ஜூலையிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பரிலும் வெளியாகின. தேர்வு நடத்தப்பட்டு ஓராண்டு முடிவடைந்தபோதும் வெற்றி பெற்ற 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பணியிடங்கள் ஒதுக்கப்படாமல் இருந்தன. 
 
    இந்த நிலையில், பணியிடங்களை ஒதுக்கும் பணிகள் இப்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  தேர்வில் வெற்றி பெற்ற அனைவரின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு அவர்களிடம் எந்த மாவட்டத்தில் பணிபுரிய விருப்பம் என்பதும் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் மாவட்ட ஒதுக்கீட்டுக்காகக் காத்திருந்தனர்.  ஒவ்வொரு மாவட்டத்துக்கு எத்தனை வி.ஏ.ஓ.க்கள் தேவை என்பதும், அவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்படும். அவர் ஒவ்வொரு கோட்டம் வாரியாக வி.ஏ.ஓ.க்களை பிரித்து அளிப்பார். இறுதி உத்தரவுகளை கோட்டாட்சியர்கள் பிறப்பிப்பர்.  அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட வி.ஏ.ஓ.க்களுக்கான பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சில நாள்களில் அதற்கான உத்தரவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
 முதல்வர் வழங்குகிறார்: வி.ஏ.ஓ.க்களுக்கான உத்தரவுகள் வழங்கும் நிகழ்வை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. 20 வி.ஏ.ஓ.க்களுக்கான உத்தரவுகளை அவர் வழங்குவார் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment