Thursday 15 December 2011

TNPSC : இடைத்தரகர்கள் வீடுகளில் சோதனை

42 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி.

சென்னை: தமிழ்நாடு தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து, இடைத் தரகர்களின் வீடுகள் உட்பட 46 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்திய குரூப் 1, குரூப் 2 அலுவலர்கள் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக வந்த புகாரை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் இந்த ஆணையத்தின் தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 16 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது. அதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 18-ம் தேதி டிஎன்பிஎஸ்சி இணைச் செயலாளர் மைக்கேல் ஜெரால்டு, சார்பு செயலாளர் ரவி இளங்கோவன் உட்பட ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. 

பல் மருத்துவர், டி.எஸ்.பி., மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, இந்தத் தேர்வில் வாரியத்தின் உறுப்பினர்களுக்கும், தேர்வு பெற்றவர்களுக்கும் இடையே இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் 46 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டது.

இதில் சென்னையில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னை, மதுரை, திண்டுக்கல், சேலம், கரூர், நாமக்கல், தேனி, வேலூர் உட்பட 46 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலர் சங்கரனின் வீடு வானவில் நகரில் உள்ளது. அங்கு லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் விஜயராகவன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டார்கள்.

ஆணையத்தின் உதவி அலுவலர் செந்தில் குமாரின் வீடு காஞ்சிபுரம் வேதாசலம் நகரில் உள்ளது.  அங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். 
ஆம்பூரில் துணை கண்காணிப்பாளர் அன்பு அலுவலகத்தில் சென்னையை சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரி, கூடுதல் டி.எஸ்.பி.சுப்பையா, இன்ஸ்பெக்டர் ஜாய் டேனியல் ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினார்கள். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக தேர்வில் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் வீடுகளில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment