Thursday 15 December 2011

TRB - தகுதித் தேர்வு.

 ஆசிரியராக  தகுதித் தேர்வு கட்டாயம்!

        இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழக அரசு மாதிரி விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேர விரும்பும் ஆசிரியர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் மே, ஜூன் மாதங்களில் இத்தேர்வு முதன் முறையாக தமிழகத்தில் நடத்தப்பட உள்ளது.

      அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் தொடர்ச்சியாக மத்திய அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும். சிபிஎஸ்இ நடத்தும் இந்தத் தேர்வு குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தை நடைமுறைப்படுத்துதற்கான மாதிரி விதிமுறைகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதையடுத்து, தமிழகப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேர விரும்பும் ஆசிரியர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவகப் பதிவு மூப்பு அடிப்படையிலேயே தேர்வுசெய்யப்பட்டனர். அதுபோல எட்டாம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் பதிவு மூப்பு அடிப்படையிலும், எழுத்துத் தேர்வு மூலமும் பணியமர்த்தப்பட்டு வந்தனர். ஆனால், இனிமேல், இந்தப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

       எப்படி இருக்கும் டி.இ.டி.?: டி.இ.டி. என்று அழைக்கப்படும் டீச்சர் எலிஜிபிலிட்டி டெஸ்ட்  (ஆசிரியர் தகுதித் தேர்வு) ஆசிரியர்களின் கல்வித் திறமையைச் சோதிக்கும் வகையில் அமைந்திருக்கும். இந்த 90 நிமிடத் தேர்வில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் இருக்கும். இந்தக் கேள்வித்தாளுக்கு விடையளிப்பதற்கான மொத்த மதிப்பெண்கள் 150. ஒவ்வொரு கேள்விக்கும் தலா ஒரு மதிப்பெண். இதில் 60 சதவீத மதிப்பெண்கள் (அதாவது 90 
மதிப்பெண்கள் )  பெற்றால் மட்டுமே ஒருவர் தேர்ச்சி பெற்றவராக கருதப்படுவார். கேள்வித்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.

     இந்தத் தேர்வில் மொத்தம் இரண்டு கேள்வித்தாள்கள். முதல் தாளில் குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை, மொழித்தாள்-1 (கற்பிக்கும் முறை), மொழித்தாள்-2 (விருப்ப மொழி), கணிதம், சுற்றுச்சூழலியல் சார்ந்த கேள்விகள் இடம்பெறும். கொடுக்கப்பட்ட 5 பகுதிகளுக்கும் தலா 30 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 150 மதிப்பெண்கள். அதேபோல இரண்டாம் தாளில் குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை (கட்டாயம் எழுத வேண்டும்), மொழித்தாள்-1(கட்டாயம்), மொழித்தாள்-2 (கட்டாயம்), கணிதம் மற்றும் அறிவியல் (கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்), சமூகவியல் (சமூகவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்), பிற ஆசிரியர்கள் இதில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதினால் போதுமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் விருப்பப் பாடக் கேள்விகளுக்கு 60 மதிப்பெண்களும், மற்ற கேள்விகளுக்கு தலா 30 மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பட்டப் படிப்பு முடித்த ஆசிரியர்களுக்கு, விருப்பப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் சேர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

       ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்பும் ஆசிரியர்கள் முதல் கேள்வித் தாளை மட்டும் எழுதினால் போதுமானது. ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை  பாடம் நடத்த விரும்பும் ஆசிரியர்கள் இரண்டாம் கேள்வித் தாளை மட்டும் எழுதினால் போதும். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நடத்த விரும்பும் ஆசிரியர்கள் இரண்டு தாள்களுக்குக்கான தேர்வை எழுத வேண்டும். இதில் 90  மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழில் பதிவு எண், தேர்வு எழுதிய ஆண்டு, மாதம், மதிப்பெண்கள் போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும். 7 ஆண்டு வரை இந்தச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருக்கும். இந்தச் சான்றிதழ் ஆசிரியர் பணிக்கான ஒரு தகுதிக்கான அடையாளமாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுமே தவிர, இந்தச் சான்றிதழ் மூலம் ஆசிரியர் பணி கிடைத்துவிடாது. பள்ளியில் ஆசிரியராக விரும்பும் ஒருவர் இத்தேர்வை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.

       இதுவரை தமிழகத்தில் ஆசிரியர் பயிற்றுநர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அல்லது ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலமே பணிக்கு அமர்த்தப்பட்டனர். ஆனால், இனி அனைத்துப் பணிகளுக்கும் கண்டிப்பாக எழுத்துத் தேர்வின்  முறையில் மட்டுமே ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும். ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் இந்தத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தகுதித் தேர்வில் தேர்ச்சியடையாத ஒருவர் கண்டிப்பாக எழுத்துத் தேர்வில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால், முதுநிலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனை பொருந்தாது என்பதால், முதுநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே பணியில் சேர்ந்துவிடலாம்.

     அதுமட்டுமல்லாமல், 2010 ஏப்ரல் மாதத்தில் பணிநியமனம் செய்யப்பட்டு இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்துகொண்டிருக்கும் ஆசிரியர்களும் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்குள் இத்தேர்வில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கு முடியும் வரை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தகுதித் தேர்வு முதல் முறையாக அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்த அரசு உத்தேசித்துள்ளது.


     கல்லூரி ஆசிரியர்களுக்கு ஸ்லெட், நெட் போன்ற தகுதித் தேர்வுகள் எப்படியோ, அதே போன்றதொரு தேர்வுதான் பள்ளி ஆசிரியர்களுக்கான டி.இ.டி. என்று அழைக்கப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வும். சிறந்த கல்விக்காகவும், சிறந்த பயிற்றுதல் திறன் கொண்ட ஆசிரியர்களை மாணவர்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் கொண்டுவரப்பட்டுள்ளது இந்தத் தகுதித் தேர்வு.

No comments:

Post a Comment