Sunday 18 December 2011

தேவை தேர்வாணைய சீர்திருத்தம்!

          பொது நிர்வாகத்தில் ஊழலின் தாக்கம் 
      தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடந்துள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகளைப் பார்க்கும்போது, இதனால் ஒரு  தலைமுறையே பாதிக்கப்படும் அபாயம் தெரிகிறது. அரசுப் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் இடத்தில் இத்தனை ஊழல்கள் நடந்ததற்குக் காரணம், அங்கு எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லாததுதான். ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் வரை ஊழல் செய்திருக்கிறார்கள்! இவர்கள் மூலம் பணம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்தவர்களும், கண்டிப்பாக ஊழல்வாதிகளாகத்தான் இருப்பார்கள். பணம் கொடுத்து புறவாசல் வழியாக அரசின் கீழ்நிலை மற்றும் உயர்மட்டப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள / செய்யப்படவுள்ள இவர்கள்தான் நாளைய பொது(அரசு) நிர்வாகத்தின் அச்சாணிகள். பொது நிர்வாகத்தில் Bureaucrats எனப்படும் அரசு அலுவலர்களின் பணியினை   மாக்ஸ் வெபர் என்ற அறிஞர் இவ்வாறு குறிப்பிடுகிறார் "Bureaucratic administration means fundamentally domination through knowledge " . இதன் அடிப்படையில் தான் வேலை வாய்ப்பகம் மூலம் அல்லாமல் TNPSC போன்ற பணியாளர் தேர்வாணையங்கள் நடத்தும் போட்டி தேர்வு மூலம் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க நமது அரசமைப்புச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொது நிர்வாகம் தொடர்பான இந்த சித்தாந்தத்திற்கு முரணாக தமிழ்நாட்டில் சமீப காலமாக அரசு அலுவலர்களின் தேர்வு  நடைமுறையும் ,  தேர்வாகி பணியில் சேர்ந்த பின்  அவர்களது பணி ஒழுக்கமும் மாறி வருவது எதிர்கால சமூக சீரழிவின் இன்றைய தொடக்கமே அல்லாமல் வேறென்ன?.

எது  தன்னாட்சி அதிகாரம்?
         குறுக்கு வழியில் பணம் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள், லஞ்சமாகக் கொடுத்த பணத்தை எடுப்பதற்காக நிச்சயம் மோசடியான, சட்ட விரோத  வேலைகளில்தான் ஈடுபடுவார்கள். அதனால் பொது நிர்வாகம் பெருமளவில் சீர்கெட்டுப் போகும் . இதற்கெல்லாம்  சற்றும் இடமளிக்காதவகையில்   ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களின் செயல்பாடுகள் அமையவேண்டும். அதற்காகத்தான் தேர்வாணையத்தின் உறுப்பினர் மற்றும் தலைவர் ஆகியோருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  தன்னாட்சி அதிகாரம் என்பதை இவர்கள் தற்போது தவறாக பொருள் கொண்டுவிட்டனர். அரசுப் பணிக்கு நேர்மையான முறையில் ஆட்களைத் தேர்வு செய்வதில் புற அழுத்தம் அல்லது அரசியல் தலையீடு இல்லாத நிலையே தன்னாட்சி அதிகாரம். ஆனால் எப்படிவேண்டுமானாலும் எந்த முறையிலும் நாங்கள் ஆட்களைத் தேர்வு செய்வோம், அதை யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதே தன்னாட்சி அதிகாரம் என்று இவர்களாகவே INTERPRET (பொருள் விளக்கம்) செய்து கொண்டு எதேச்சாதிகாரமாக செயல்பட்டதன் விளைவே இன்றைய அதிரடிக்கெல்லாம்    அடிப்படைக் காரணம்.

 தேவை தேர்வாணைய சீர்திருத்தம்
          தேர்வாணைய செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும்,  ஊழலற்ற நேர்மையான தேர்வு முறையினையும் உறுதிப்படுத்த என்ன சீர்திருத்தங்கள் செய்யலாம்? இனி பார்ப்போம்.


1  .தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தில் அரசியல், சாதி பின்புலங்களின் தாக்கம் இருக்கக்கூடாது.

2 .    தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க சுதந்திரமான தேர்வாளர் குழு ஒன்றை அமைக்கவேண்டும். அக்குழுவில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில அரசின் தலைமைச் செயலாளர், பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஆகியோர் இடம் பெறலாம்.

3 .  அரசுத்துறைகளில் பணிபுரிந்தவர்களை தேர்வு செய்யும் போது , அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவர்களாக இருக்கக்கூடாது.


4 . தேர்வு செய்யப்படும்    தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு நடத்தை நெறிமுறைகள் வகுக்கப்படவேண்டும்.

5 .உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாக குறைக்கப்படவேண்டும்.


6 .உறுப்பினர்கள் நியமனத்தில் சாதிய பிரதிநிதித்துவம் கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டும்.  ஆனால் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படலாம்.


7 .  உறுப்பினர்கள் பணியில் சேர்ந்தது முதல் ஒவ்வோராண்டும் தமது சொத்துக் கணக்கை  குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யவேண்டும்.

8 .தேர்வாணைய செயலர் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பதவிகளுக்கு துடிப்பான இளைய அதிகாரிகளையே நியமனம் செய்ய வேண்டும்.

9 .  தேர்வு நடைமுறைகளை பொறுத்தவரை,  தேர்வு நாளன்றே விடைத்தாளின் நகல் ஒன்றை மாணவர்களுக்கு வழங்கவேண்டும். (சமீப காலமாக தேர்வாணையமே விடைகளை வெளியிடுவது வரவேற்க்கத்தக்கது.)

10. தேர்வாணையத்துக்கு  போதிய அலுவலர்களை மாநில அரசு நியமிக்கவேண்டும்.

11.  தேர்வுகள் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்கள் அனைத்துக்கும் ஒளிவு மறைவின்றி பதில்கள் தரப்படவேண்டும். அது எமது அறிவு சார் சொத்துரிமை என்பது போன்ற சொத்தை வாதங்கள் தவிர்க்கப்படவேண்டும்.


12 .    நேர்முகத் தேர்வு முறை முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும்.


13. தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் அனாவசிய காலதாமதம் தவிர்க்கப்படவேண்டும்.

14 .முன்கூட்டியே வினாத்தாள்கள், விடைகளை வெளியிடுவோர் கண்டுபிடிக்கப்பட்டு  குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படவேண்டும்.

15. அதிரடி நடவடிக்கை எடுத்து, தவறான வழிகளில் வேலைக்குச் சேர்ந்தவர்களை உடனடியாக அந்தப் பணிகளில் இருந்து நீக்க வேண்டும்.

16. தேர்வு நடைமுறைகளை ஆண்டுதோறும்  தணிக்கைக்கு உட்படுத்தவேண்டும்.

17 . ஆண்டுதோறும் குரூப்-1 , குரூப்-2,  குரூப்-4  உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை நடத்தி இளைஞர்களுக்கு நம்பிக்கையையும், எதிர்காலத்தையும் ஏற்படுத்தவேண்டும்.

18 . எல்லாவற்றுக்கும் மேலாக ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் மனசாட்சிக்கு விரோதமாக நடந்துகொள்ளாமல் நேர்மையாக பணியாற்றவேண்டும்.

    இதுவே லட்சியப் பாதையிலிருந்து இன்னமும் விலகாமல் பயணித்துக்கொண்டிருக்கும் தமிழக இளைஞர்களின் ஏக்கமும் எதிர்பார்ப்பும்.  இக்கட்டுரை குறித்த உங்களின் கருத்துக்களை தவறாமல் பதிவு செய்யுங்கள். நன்றியுடன் ......


                                                                                    - போட்டித் தேர்வு போராளி. 


                                                                                                          

1 comment:

  1. The govt should take necessary action to implement this reforms

    ReplyDelete