Monday 6 February 2012

குரூப் 2, வி.ஏ.ஓ. பணியிட உத்தரவு: விரைவில்

விரைவில் வெளியாகிறது குரூப் 2, வி.ஏ.ஓ. பணியிட உத்தரவு : முறைகேட்டுக்கு இடம் அளிக்காமல் இருக்க தமிழக அரசு தீவிரம்

       குரூப் 2, கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கான பணியிடங்களை ஒதுக்குவதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.தேர்வுகளை ரத்து செய்யவோ அல்லது பணியிடங்களை ஒதுக்காமல் காலம் தாழ்த்தும் எண்ணமோ இல்லை என தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டது. தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர், சார் பதிவாளர் உள்ளிட்ட ஆயிரத்து 628 பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை லட்சக்கணக்கான பட்டதாரிகள் எழுதினர்.2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கான தேர்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். குரூப் 2 தேர்வு வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியானது. மேலும், அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் எந்தெந்த அரசுத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்கிற விவரமும் வெளியிடப்பட்டது. ஆனால், உரிய உத்தரவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது.கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியானாலும், பணியிட உத்தரவு வெளியாகவில்லை. 
     இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் செல்லமுத்து மற்றும் உறுப்பினர்கள் வீடுகள், அவர்களின் அலுவலக அறைகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸôரின் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், குரூப் 2 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆறு வார காலத்துக்குள் பணியிடங்களுக்கான உத்தரவை வழங்க வேண்டும் என ஆணையிட்டது. அந்த ஆறு வார காலம் பிப்ரவரி 6-ம் தேதியுடன் முடிவடைகிறது.விரைவில்... பணியிடங்களுக்கான உத்தரவை வெளியிடுவதில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. ஆனாலும், முறைகேடான வழிகளில் யாரும் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பதவிகளைப் பிடித்து விடாமல் இருக்கவும் தமிழக அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.இதற்கான மனுவை உயர் நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ளது. பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் இணைச் செயலாளர் சார்பில் இந்த மனு தாக்கல் ஆகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 
        குரூப் 2 தேர்வு உள்பட அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பல்வேறு தேர்வுகளில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்ட அரசுப் பதவியில் உள்ளோர், தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியபோது, பணியாளர்களைத் தேர்வு செய்தது தொடர்பாக சில ரகசிய ஆவணங்களும், முறைகேட்டுப் புகார்கள் தொடர்பான ஆதாரங்களும்  கைப்பற்றப்பட்டுள்ளன. பணியாளர்களைத் தேர்வு செய்ததிலும், மதிப்பெண்கள் வழங்கியதிலும், முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடந்திருப்பதற்கான முகாந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முறைகேடுகள்-ஊழல்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்குப் பணியிடங்களை ஒதுக்கினால் அது நிர்வாகத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும். எனவே, முறைகேட்டுப் புகார்கள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது போன்ற நபர்கள் பணிகளைப் பெறும்போது, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சிரமம் ஏற்படும். 
நிபந்தனையுடன் பணியிட உத்தரவு... எனவே, "பணியிட உத்தரவுகள் லஞ்ச ஒழிப்புப் போலீஸôரின் விசாரணையின் முடிவுக்கு கட்டுப்பட்டது' என்பதைக் குறிப்பிட வேண்டும். இதன் மூலம் தவறான வழியில் ஒருவர் பணியில் சேர்ந்தார் என்பது விசாரணையின் முடிவில் தெரிய வந்தால் அவரை பணியில் இருந்து நீக்க வாய்ப்பு ஏற்படும்.எனவே, அரசின் நலன் கருதி இந்த அம்சத்தை ஏற்கெனவே வெளியிட்ட உத்தரவுடன் சேர்த்து வெளியிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது

No comments:

Post a Comment