Sunday 12 February 2012

ஓய்வுக்குப்பின்னும் இயங்கும் ஒரு நேர்மை.

                                        
         தமிழரின் புத்தாண்டான தை மாதம் பிறக்க இன்னும் சில தினங்களே இருக்க செல்லமுத்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தை பிறந்த சில  தினங்களில் ஆர். நடராஜ் தேர்வாணையத்தின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டு, முறைபடி பதவி யேற்றுக்கொண்டார்.

       தேர்வாணையம் போன்ற அமைப்பு களுக்கு பொதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்படுவது வழக்கம். ஏனெனில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டுமே நிர்வாக பணியை மிகச் சிறப்பாக செய்யக்கூடியவர்கள். இன்றைக்கு இந்திய அரசை நிர்வாகம் செய்து வருபவர்கள் இவர்களே. அப்படி இருக்கையில் வழக்கத்திற்கு மாறாக ஐ.பி.எஸ். அதிகாரியான ஆர். நடராஜ் தேர்வாணையத் தலைவராக நியமிக்கப்பட்டது, டி.என்.பி.எஸ்.சி. வழக்குகளை வெற்றிகரமாக நடத்த வேண்டுமென்ற தமிழக அரசின் திட்டம்தான் காரணம்.

   இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் டி.என்.பி.எஸ்.சி. வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றம் வரை நிச்சயம் செல்லும். இப்போது வழக்கை நடத்திவரும் தமிழக அரசுக்கு டி.என்.பி.எஸ்.சி. சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் தேவை. இன்னும் தேர்வாணைய உறுப்பினர்கள் யாரும்  ராஜினாமா செய்யாததால் அவர்கள் பற்றிய ஆவணங்கள் வழக்குகளுக்கு தேவை. இன்னும் ஒரு வருடத்திற்கு வழக்குகளை தமிழக அரசுக்கு சாதகமாக நடத்த குற்றவியல் மற்றும் புலனாய்வு திறன் பெற்றவர் டி.என்.பி.எஸ்.சி.யில் தலைவராக இருந்தால்தான் தமிழக அரசுக்கு நடந்த ஊழல்களை பரிபூரணமாக நிரூபிக்க முடியும். அந்த வகையில் நடராஜ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் நிச்சயம் உறுதிப்பட கூறமுடியும் கடந்த பத்து வருடங்களாக பதவியில் இருந்த தேர்வாணையத் தலைவர்களைவிட இவர் மிக மிக நேர்மையானவர். ஓய்வுப்பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி நடராஜ் தன்னுடைய பணிக் காலத்தில் ஊழல் புகார்களுக்கு ஆளாகாதவர். நேர்மையானவர் என்று பெயரெடுத்தவர். இலக்கிய ஆர்வலர். இவை எல்லாவற்றையும்விட, மிகச் சிறந்த மனிதாபிமானி. நடராஜ் கடைசியாக பணியாற்றிய சிறைத் துறையில் அவர் செய்த சேவைகளை பார்த்தாலே  அவரது நேர்மையை புரிந்துகொள்ள முடியும்.


         பொதுவாகவே சிறைக் கைதிகளை மனிதர்களாகவே மதிக்காத ஒரு தன்மை பெரும்பாலான மக்களிடம் பரவிக்கிடக்கிறது. காவல்துறையில் இது பல மடங்கு அதிகம். ஒரு குற்றத்தை புரிந்து, சிறைக்கு செல்ல வேண்டும் என்ற வேண்டுதலோடு யாரும்            பிறப்பது கிடையாது. கல்வி, பண்பு, குணநலன், வளர்ப்பு முறை ஆகியவைகளே ஒருவரை சிறையிலிருக்க வேண்டுமா வெளியிலிருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கிறது. இதை நன்கு புரிந்தவர்தான் நடராஜ். இவர் சிறைத் துறைத் தலைவராக இருந்த காலத்தில் அவர் செய்த சிறை சீர்திருத்தங்கள், பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியன. சிறைக் கைதிகளை "இல்லவாசிகள்' என்றுதான்  அழைக்க வேண்டும், கைதிகள் என்று அழைக்கக் கூடாது என்று உத்தரவிட்டு, அதை நடைமுறைப்படுத்தினார். சிறைக் கைதிகளுக்கு யோகா பயிற்சி, திருக்குறள் புத்தகங்கள் வழங்குதல், கைத்தொழில் கற்றுக்கொடுத்தல் என்று பல்வேறு சீர் திருத்தங்களை செயல்படுத்தினார். அண்ணா பிறந்த நாளின்போது கைதிகளை முன் விடுதலை செய்வதில் முனைப்பாக இருந்தார். ஞாயிற்றுக்கிழமைகளிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிறைக் கைதிகளைப் பார்வையிடலாம் என்ற புதிய உத்தரவைப்  பிறப்பித்தார். இது வேலைக்கு செல்வோருக்கு பெரும் நிம்மதி தந்தது.

          நடராஜ் அவர்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மகுடம் என்று சொல்ல வேண்டியது, பண்டிகை நாட்களில் தடுப்பு இல்லாமல், தண்டனைக் கைதிகள் தங்கள் உறவினர்களை பார்க்க அனுமதி தந்தது. சிறையில் பார்வையிடச் செல்பவர்களுக்கும் கைதிகளுக்கும் 8 அடி இடைவெளி உள்ள இரும்புப் கம்பித் தடுப்பு இருக்கும். அந்த தடுப்புக்கு அந்தப் பக்கம் உறவினர்களும், இந்தப் பக்கம் கைதிகளும் நின்று பேசுவார்கள்.  வரிசையாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கத்தினால் எப்படி இருக்கும். இதுதான் சிறை. ஆண்டுக்கணக்கில் தண்டனை பெற்று இருப்பவர்கள் இதே போல கம்பிகளின் இடைவெளியில் நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரமலான் போன்ற பண்டிகை நாட்களில் தண்டனை சிறைவாசிகள், கம்பித்தடுப்பு இல்லாமல் அருகருகே உட்கார்ந்து சந்திக்கலாம் என்ற புதிய சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார். 10 ஆண்டுகளாக உங்கள் குழந்தையை கம்பிக்கு அந்தப்பக்கம் இருந்து பார்த்து பழகிவிட்டு, ஒருநாள், உங்கள் குழந்தையை மடியில் வைத்து கொஞ்சினால் எப்படி இருக்கும்? அந்த உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகள் உள்ளதா? இதையடுத்து கைதிகள் மிகப் பெரிய அளவில் இவரை கொண்டாடினர். இப்படி சிறைத்துறையில் சீர்திருத்தங் களை கொண்டவந்தவர்தான் இப்போது தமிழக இளைஞர்கள் மகிழும் வகையில் பல  மாற்றங்களை டி.என்.பி.எஸ்.சி.யில் உடனடியாக அறிவித்துள்ளார்.

சீர்திருத்தங்கள் சில:

தேர்வாணையத்தின் புதிய தலைவராக நடராஜ் பதவி  ஏற்றதும் அறிவித்த முக்கிய சீர்திருத்தங்கள்.

* தேர்வு பற்றிய வெளிப்படையான நிர்வாகம்   அமைக்கப்படும்.

* தேர்வு முடிந்த பிறகு வினாக்களுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியிடப் படும். விடைகளில் ஆட்சேபனை இருந்தால் யாரும் தெரிவிக்கலாம். இந்த தகவல் தெரிவிக்க 7 நாட்கள் முதல் 10 நாட்கள் காலஅவகாசம் கொடுக்கப்படும். அதன் பின்னர் நிபுணர்குழு அமைத்து விடைகள் சரி என்று தெரிந்த பின்னர் தேர்வுத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். அதன் பின்னர் முடிவு அறிவிக்கப்படும்.

* தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் விடைத்தாள்களை விரும்பிய தேர்வர்கள் பார்வையிடலாம்.

* தேர்வுகளுக்கு உரிய தேர்வு முறை, பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்படும்.

* அரசுப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிப் பொறுப்புகளை கருத்தில் கொண்டு தேர்வுக்கான பாடத்திட்டங்களில் உரிய மாற்றங்களும், தேர்வர்களின் பகுத்தாய்வு திறனை ஆராயும் வகையிலும் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படும்.

* தேர்வுக்காக இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்படும்.

* எந்த தேதியில் எந்த தேர்வு நடத்தப்படும், எந்த தேதியில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும், எந்த தேதியில் முடிவு அறிவிக்கப்படும் என்ற அனைத்து விவரங்களும் கால அட்டவணையாக தயாரித்து வெளியிடப்படும்.

* நேர்முகத் தேர்வு வெப்கேமரா மூலம் பதிவு செய்யப்படும். யாருக்காவது சந்தேகம் வந்தால் அவர்கள் வந்து பதில் அளித்ததை காணமுடியும்.

* குரூப் I தேர்வு, குரூப் II தேர்வுகளுக்கு ஒரே கல்வித்தகுதிதான். எனவே அவர்கள் ஒருமுறை தேர்வு எழுத விண்ணப்பித்தால் போதும். அவர்களுக்கு ஒரு அடையாள குறியீட்டு எண் கொடுக்கப்படும். அதை  அவர்கள் பத்திரமாக வைத்திருந்தால் மறுமுறை விண்ணப்பிக்க தேவையில்லை. அந்த குறீயீட்டு எண்ணை தெரிவித்து தேர்வு எழுத உள்ளதை தெரிவித்தால் போதும். அவர்கள் தேர்வு எழுதலாம்.

* தேர்தல் வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டுப்போடும்போது வெப்கேமரா வைத்து கண்காணிப்பது போல அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வின்போது தேர்வு அறைகளில் வெப்கேமரா பொருத்தப்படும்.

* தேர்வாணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். கணினி மயமாக்கப்படும்.

     இவையெல்லாம் தேர்வாணையத்தின் தலைவராக நடராஜ் பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் அறிவித்தார். சமீபத்தில்  டி.என்.பி.எஸ்.சி.யில் கண்டுபிடிக்கப்பட்ட முறைகேடுகள், விதிமுறை மீறல்கள் இவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து இனிவரும் காலங்களில் எந்த ஒரு தேர்வுகளிலும் முறைகேடுகள் செய்யமுடியாத அளவிற்கு ஒரு சரியான திட்டமே புதிய தேர்வாணையத் தலைவர் அறிவித்துள்ள இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகும். இதுதான் பல ஆண்டுகளாக தமிழக இளைஞர்களும் பொது அறிவு உலகமும் டி.என்.பி.எஸ்.சி.யிடம் எதிர்பார்த்தது. 

       தமிழக பட்ஜெட் அறிவிப்பு முடிந்த  பின்னர் புதிய அறிவிப்புகளை எதிர் பார்க்கலாம். மற்றபடி தாமதமாகும் பணி நியமனங்கள், வெளியிடப்படாமல் உள்ள குரூப்-ஒ தேர்வு முடிவுகள் என அனைத்தும் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் பொருத்தே வெளிவரும். இதில் இந்த புதிய தலைவரும்கூட தலையிட இயலாது. அவரது பணி முழுவதும்  டி.என்.பி.எஸ்.சி. நேர்மையான தேர்வு நடத்துவதற்கு ஏதுவாக அறிவித்துள்ள சீர்திருத்த நடவடிக்கைகளை மேற் கொள்வதுதான். தமிழக அரசின்  அனுமதியுடன் குரூப்-ஒ, ஒஒ, ஒய தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு, தேர்வுகளை நடத்தி முடிப்பது. ஆண்டறிக்கையை தயார் செய்து சட்டமன்றத்தில் சமப்பிப்பது. அனைத்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான பாடத் திட்டம் மற்றும் வினாக்களை வடிவமைப்பது. அதாவது புதிய மாற்றங்கள் செய்வது போன்றவை ஆகும். அது இப்போது நிறைவேறுவது மிக்க மகிழ்ச்சி. இனிவரும் காலங்களில் நேர்மையான டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை  எதிர்பார்க்கலாம். தேர்வாணைய வரலாற்றிலேயே இரண்டு நேர்மையான அதிகாரிகள் (ஆர். நடராஜ் ஐ.பி.எஸ்., உதய சந்திரன் ஐ.ஏ.எஸ்.) பல சிறப்பான மாற்றங் களையும், படிப்பு  ஒன்றே மூலதனமாக கொண்ட இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு களையும் ஏற்படுத்தித் தர உள்ளனர். நல்ல சூழல் உருவாகியுள்ளது. அதனால் நம்பிக்கையுடன் படியுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்!  
                                                            நன்றி: பொது அறிவு உலகம்.

No comments:

Post a Comment