Monday 13 February 2012

‘‘நம்பிக்கையோடு வாருங்கள் இளைஞர்களே’’ -நட்ராஜ் அழைப்பு

          TNPSC :  புத்துயிர்அளிப்பாரா புதிய தலைவர்?

  தமிழக அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நல்ல பாதையில் பயணிக்கப் போகிறது என்கிற நம்பிக்கையைத் துளிர்விடச் செய்துள்ளது.

‘டி.என்.பி.எஸ்.சி" என்று சொன்னாலே உடனடியாக நினைவுக்கு வருவது லஞ்சமும் ஊழலும்தான். அந்த அளவுக்கு முறைகேடுகள் புரையோடிப் போயிருக்கிற ஓர் இடமாக டி.என்.பி.எஸ்.சி. மாறிவிட்டது. நேர்மையற்ற அதிகாரிகளும், ஊழல்மிக்க அரசியல்வாதிகளும் இதற்கு முக்கியக் காரணம். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வீடுகளில் நடைபெற்ற சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பணமூட்டைகளே அனைத்திற்கும் சாட்சி.

அதிரடி நடவடிக்கையின் தொடர்ச்சியாக, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆர்.நட்ராஜை, டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது தமிழக அரசு. இந்த மாற்றத்திற்குப் பிறகு, டி.என்.பிஸ்.சி. அமைப்பின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

"சுமார் 15 ஆண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி.யே கதி என்று கிடந்தவன் நான். சிவில் சர்வீஸ் தேர்வில்கூட நேர்முகத்தேர்வு வரை சென்றேன். ஆனால், டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் என்னால் வெற்றிபெற முடியவில்லை. அந்தளவுக்கு அங்கு ஊழல் மலிந்து கிடக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பே உரிய சீர்திருத்தங்களைச் செய்திருந்தால், என்னைப் போன்ற பல இளைஞர்கள் அரசுப்பணிக்குச் சென்றிருப்பார்கள். பரவாயில்லை, இப்போதாவது டி.என்.பி.எஸ்.சி.க்கு விமோச்சனம் கிடைத்திருக்கிறதே என்று மகிழ்ச்சி அடைகிறேன்" என்கிறார், மதுரையில் போட்டித்தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையம் நடத்திவரும் இளைஞர் ஒருவர்.

டி.என்.பி.எஸ்.சி. அமைப்பு சிறப்பாக செயல்படுவதற்கு என்ன செய்ய வேண்டும், அந்த அமைப்பின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை போட்டித் தேர்வுகளில் ஆர்வமுள்ள சிலரிடம் கேட்டோம்.

துணை கலெக்டர்,  டி.எஸ்.பி. போன்ற உயர்ந்த பதவிக்குச் செல்ல வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருந்தார் ஒரு இளைஞர். பத்தாண்டுகளாக கடின உழைப்பில் ஈடுபட்ட அந்த கிராமத்து இளைஞரால், கீழ்நிலை ஊழியராக மட்டுமே அரசுப்பணியில் சேர முடிந்தது. "பணம் கொடுத்தால்தான் அரசு வேலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே, டி.என்.பி.எஸ்.சி. போன்ற அமைப்புகளில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது அவசியம். நேர்முகத் தேர்வுகளில்தான் அதிகமாக ஊழல் நடைபெறுகிறது என்று சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும்போது, குரூப் 1 உள்ளிட்ட சில தேர்வுகள் தவிர, மற்ற பணிகளுக்கான தேர்வுகளுக்கு நேர்முகத் தேர்வை எடுத்துவிடலாம். அதற்குப் பதிலாக, ஆளுமை திறனை அறிந்து கொள்ள சைக்கோமெட்ரிக் தேர்வு நடத்தலாம்" என்கிறார் அந்த இளைஞர்.

"டி.என்.பி.எஸ்.சி. செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை என்பது மிக மிக முக்கியம். அதை உறுதி செய்துவிட்டாலே பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும். டி.என்.பி.எஸ்.சி. நடத்துகிற ஒவ்வொரு தேர்வுக்குமான கேள்வித்தாள்களையும், அவற்றுக்கான பதில்களையும் சிறந்த நிபுணர் குழுவின் மூலமாக தயாரிக்க வேண்டும். கேள்விகளும், பதில்களும் 100 சதவிகிதம் பிழையின்றி இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். குரூப் 1 போன்ற மிக முக்கியப் பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும். ரயில்வே தேர்வாணையம் உள்ளிட்ட தேர்வுகளில் ஓ.எம்.ஆர். ஷீட்டின் நகல், மாணவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. அதுபோல, டி.என்.பி.எஸ்.சி. தேர்விலும் ஓ.எம்.ஆர். ஷீட்டின் நகல் வழங்கப்பட வேண்டும். கேள்விக்கான விடைகளை, தேர்வு முடிந்தவுடன் கட்டாயம் வெளியிட வேண்டும். நேர்முகத்தேர்வு வெப்கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு அதை, மதிப்பெண் அளிப்பதற்கு முன்பாக ஆணையத்தின் தலைவர் நேரடியாகப் பார்க்க வேண்டும்.

சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் கால அட்டவணைப்படி நடத்தப்படுகிறது. தேர்வுக்கான அறிவிப்பாணை ஒவ்வொரு ஜனவரி மாதமும் தவறாமல் வெளியாகிறது. ஆரம்பக்கட்ட தேர்வு, அதற்கான முடிவுகள் ஆகியவற்றுக்கான தேதிகள், பிறகு முக்கியத் தேர்வுக்கான தேதிகள், அதற்கான முடிவுகள் வெளியாகும் காலம் ஆகிய விவரங்கள் முன்கூட்டியே தெரிகிறது. அதேபோல டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளும் காலஅட்டவணைப்படி நடத்தப்பட்டு, உரிய காலத்தில் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்" என்கிறார், சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமியின் இயக்குநர் சத்யா.

டி.என்.பி.எஸ்.சி. சிறப்பாக செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவுடன் அனைவரும் தவறாமல் சொன்ன ஒரு கருத்து, "புதிய தலைவர் கூறியுள்ள விஷயங்களை அப்படியே அமல்படுத்தினால் போதும்"என்பதுதான்.


தேர்வாணையம் சிறப்பாக செயல்பட செய்ய வேண்டியது என்ன?
- இளைஞர்கள் பேட்டி

பிரபாகர் (சென்னை) : ஒவ்வொரு பிரிவினருக்கும் கட்-ஆப் மதிப்பெண் என்ன என்ற விவரம், தேர்வு எழுதுபவர்களுக்குத் தெரிவதில்லை. எனவே, கட்-ஆப் மதிப்பெண் குறித்த விவரங்களை கட்டாயம் வெளியிட வேண்டும். தேர்வு எழுதிய மாணவர் கேட்டால், அவருக்கு விடைத்தாள் வழங்கப்பட வேண்டும்.

கோபி (பொள்ளாச்சி) : கடந்த ஜூன் மாதம் தேர்வு எழுதினேன். இதுவரையில் முடிவு வெளியிடப்படவில்லை. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடும்போதே, தேர்வு நடைபெறும் நாள் மற்றும் முடிவுகள் வெளியாகும் நாள் ஆகியவற்றையும் அறிவிக்க வேண்டும். யு.பி.எஸ்.சி. மற்றும் சில தேர்வு வாரியங்கள் ஓராண்டில் என்னென்ன தேர்வுகளை நடத்தப்போகிறோம் என்ற விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகின்றன. இதனால், நாம் எந்தத் தேர்வை எழுதலாம், எந்தத் தேர்வு நமக்குத் தேவையில்லை என்பதை முன்கூட்டியே முடிவு செய்யலாம். இதேபோல டி.என்.பி.எஸ்.சி.யும் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்க வேண்டும்.

உதயக்குமார் (மதுரை): தொடர்ந்து தேர்வு எழுதுகிறேன். தேர்வு முடிவில் என் நம்பர் வருவதில்லை. மீண்டும் அடுத்த தேர்வுக்குத் தயாராகிறேன். கஷ்டப்பட்டு படிக்கிறேன். அதிகாலை 2 மணி வரை படித்துவிட்டு மறுநாள், தனியார் கம்பெனி வேலைக்குச் செல்கிறேன். இப்படியே ஏழெட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. என்னைப்போன்ற  பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் நிலை இதுதான். என் விடைத்தாளை எனக்குக் கொடுத்தால் என்னுடைய ப்ளஸ், மைனஸ் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

ஜோஷ்வா (நெல்லை) :
கட்-ஆப் மதிப்பெண் என்ன, வெயிட்டிங் லிஸ்ட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற விவரங்களை வெளியிட வேண்டும். குரூப் 1, குரூப் 2 என ஒவ்வொரு தேர்வுக்குமான பாடத்திட்டங்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு வெளியில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும். இதனால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.



‘நம்பிக்கையோடு   வாருங்கள்        இளைஞர்களே’’
 -டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் பேட்டி

‘‘அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நிறைய சீர்திருத்தங்களைக்  கொண்டுவர உள்ளேன். முதலில், தேர்வாணையத்தைச் சூழ்ந்துள்ள புகைமண்டலம் அகற்றப்படும். நாணயம் பெறாத, நாணயமான சேவையாக தேர்வாணையம் செயல்படும். வெளிப்படையான நிர்வாகம் உறுதி செய்யப்படும்.

எழுத்துத் தேர்வு எப்போது, நேர்முகத் தேர்வு எப்போது, முடிவுகள் எப்போது என்ற விவரங்கள் அனைத்தும் கால அட்டவணையாக தயாரித்து வெளியிடப்படும். தேர்வு முறை, பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்படும். அரசுப் பணியாளர்களின் பணிப்பொறுப்புகளை கருத்தில் கொண்டு, தேர்வுக்கான பாடத் திட்டங்களில் உரிய மாற்றங்கள் கொண்டுவரப்படும். தேர்வர்களின் பகுத்தாய்வுத் திறனை ஆராயும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்படும். தேர்வு முடிந்த பிறகு, இணையதளத்தில் விடைகள் வெளியிடப்படும். தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் விடைத்தாள்களை சம்பந்தப்பட்ட தேர்வர்கள் பார்வையிடலாம்.  தேர்வு நடைபெறும் அறைகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். நேர்முகத் தேர்வுகள் வெப்கேமரா மூலம் பதிவு செய்யப்படும். தேவைப்பட்டால், வீடியோ பதிவை தேர்வர்கள் காணலாம். தேர்வாணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் கனிணியில் பதிவு செய்யப்படும்.

முடிவுகள் தாமதமாவதற்கு சில நியாயமான காரணங்கள் உள்ளன. எழுத்துத்தேர்வில் விடைத்தாள்கள் இரண்டு முறை மதிப்பீடு செய்யப்படுகிறது. அதில் வித்தியாசம் அதிகமாக இருந்தால் மூன்றாவது மதிப்பீட்டுக்கு அனுப்பப்படுகிறது. தேர்வு எழுதியவருக்கு முழுமையான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற விதிகள் உள்ளன. ஆனாலும்கூட, இந்த நடைமுறைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தாமதங்களைத் தவிர்த்தாலே பெரும்பாலான பிரச்சினைகளைத் தவிர்த்துவிடலாம்.

ஆணையத்தில் கொண்டுவரப்படும் சீர்திருத்தங்கள், தனிநபர்களைச் சார்ந்ததாக அல்லாமல் நிரந்தரமாக நீடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கு பணிக்காலம் குறைவாக இருந்தாலும்கூட, எடுத்திருக்கிற பணியில் அதிகநேரம் செலவிடுவதாலும், அக்கறையோடும் ஆர்வத்தோடும் செயல்படுவதாலும் பத்தாண்டுகளில் செய்யக்கூடிய காரியங்களை என்னால் ஒரே ஆண்டில் செய்துவிட முடியும்.

குறுக்கீடு (interference), நல்லமுறையில் தலையிடுதல் (intervention), என இரண்டு விதங்கள் உள்ளன. நல்ல நோக்கத்திற்காக ஒரு விஷயத்தில் தலையிட்டு நல்லது கெட்டது என்று சொல்வதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமை உண்டு. அதை குறுக்கீடு என்று சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரையில் நல்ல நோக்கத்திற்காக தலையிடுவதை வரவேற்பேன். குறுக்கீடுகளை அனுமதிக்க மாட்டேன்.

தேர்வாணையத்திலேயே காலிப்பணியிடங்கள் உள்ளன. அந்த இடங்களில் தற்காலிக பணியாளர்களை நியமித்திருக்கிறோம். ஒரு பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் அரசை அணுக வேண்டியுள்ளது. உரிய முயற்சிகளைச் செய்தால் காலிப்பணியிடங்களை நிரப்பலாம். அதற்கான நடவடிக்கையை எடுப்போம்.

தேர்வாணையத்தின் இணையதளத்தை விரிவுபடுத்தி மக்களுடன் கலந்துரையாடக்கூடிய வகையில் அதை மாற்றப் போகிறோம். அதேபோல, தேர்வு குறித்த தகவல் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்வதற்காக தேர்வாணையத்தில் ‘தகவல் அறியும் மையம்’ ஒன்றையும் ஏற்படுத்த உள்ளோம். அங்கு, கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் வழங்கப்படும். இளைஞர்கள் அதிகளவில் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். எனவே, தேர்வாணையத்திற்கு ஃபேஸ்புக்கிலும் ஒரு கணக்கு ஆரம்பிக்கலாம் என்று யோசித்திருக்கிறேன். இது, தேர்வாணையத்திற்கும் தேர்வு எழுதும் இளைஞர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

இதுபோன்ற நடவடிக்கைகளால் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும் என்று நம்புகிறேன். எனவே, நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் போட்டித்தேர்வுகளில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன்.’’


பெட்டி செய்தி: தாமதமாகும் முடிவுகள் தத்தளிக்கும் வாழ்க்கை
டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்துவிட்டு வெளியே வந்தால், அலுவலக வாசலில் நம்மை சூழ்ந்து கொண்டனர் இளைஞர்கள் சிலர். குரூப் 2எழுதி வெற்றிகரமாக தேர்ச்சியும் பெற்றுவிட்டு, பணி நியமன ஆணையை அரசு வழங்காததால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி, பரிதாபத்துக்கு உரியவர்களாக காட்சியளித்தனர். பெயர் மற்றும் புகைப்படம் வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டதால் பெயர்களை மாற்றியுள்ளோம்.

கண்ணன் (தூத்துக்குடி): "குரூப் 2தேர்வில் வெற்றிபெற்றுவிட்டதால் திருமணத்திற்கு பெண் பார்த்தோம். என் மனதிற்குப் பிடித்த அழகான, படித்த பெண். எனக்கு அரசு வேலை கிடைக்கப்போகிறது என்றதும் பெண் கொடுக்க ஆர்வம் காட்டினர். ஆனால், அரசு வேலை கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியவில்லை. பெண்ணின் அப்பா நேற்று எனக்கு போன் செய்தார். உனக்கு அரசு வேலை கிடைக்குமா, இல்லை என் பெண்ணை வேறு இடத்தில் கொடுக்கவா என்று கேட்கிறார். என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்றார் அந்த இளைஞர்.

சுதாகர் (திருவண்ணாமலை) : "குரூப் 2தேர்வில் வெற்றிபெற்றவுடன் பக்கத்து ஊரில் பெண் பார்த்து திருமணம் நிச்சயமாகி விட்டது. கடந்த ஆண்டே திருமணம் முடிந்திருக்க வேண்டும். ஆனால் பணி நியமன ஆணை வந்தால்தான் திருமணம் என்று பெண் வீட்டில் சொல்லிவிட்டார்கள். 2010ல் தேர்வு எழுதி, 2011ல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. ஆனால் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. இதனால் என் திருமணமே நின்று போனது. எனக்கு பேசி முடித்த பெண்ணை வேறு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்துவிட்டனர். இதை வெளியே சொல்லவும் வெட்கமாக இருக்கிறது. தூக்கத்தைத் தொலைத்து ஆறு மாதமாகிவிட்டது" என்றார் அவர்.

சிவக்குமார் (விழுப்புரம்) : "அரசு வேலை கிடைத்துவிட்டது என்று என் கிராமத்தில் அனைவருக்கும் ஸ்வீட் வழங்கினேன். அரசு வேலை என்னப்பா ஆச்சுன்னு இப்போது ஊர்க்காரர்கள் கேட்கிறார்கள். சிலர், என்னப்பா ஊரை ஏமாத்துறியா என்கிறார்கள். அரசு அறிவிப்பு வந்திருக்கிறதா என்று தினமும் பேப்பர் பார்ப்பதும், டி.வி.யில் செய்தி பார்ப்பதுமாக காலம் கழிகிறது."
                                                                                   நன்றி: புதிய தலைமுறை

No comments:

Post a Comment