Saturday 11 February 2012

TRB தகுதித் தேர்வுக்கு தடை இல்லை

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
 


     சென்னை, பிப். 10: பள்ளி ஆசிரியர்களை நியமிக்கும் முன் அவர்களுக்குத் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணைக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி ஆசிரியர் நியமனத்தின்போது தகுதித் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆசிரியர் பணியில் சேர விரும்புபவர்கள் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த நவம்பர் 15-ம் தேதி தமிழக அரசின் கல்வித் துறை அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு சங்கம் சார்பில் அதன் செயலாளர் முருகதாஸ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
   பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஏற்கெனவே நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்கு எங்கள் சங்க உறுப்பினர்களில் 27 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் ஏற்கெனவே பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களும் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம் என்று இப்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் முடிந்த நிலையில் மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று கூறுவது சட்ட விரோதமாகும். ஆகவே, எங்கள் சங்க உறுப்பினர்கள் 27 பேரை தகுதித் தேர்வு எழுத நிர்பந்திக்கும் அரசாணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சந்துரு, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். 
 
அவரது தீர்ப்பு விவரம்: பணி நியமனம் தொடர்பாக நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தை அமல்படுத்துவதைத் தவிர மாநில அரசுக்கு வேறு வழியில்லை. கல்லூரிப் பேராசிரியர்கள் நியமனத்தில் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மற்றும் மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகளை யு.ஜி.சி. நடத்தி வருகிறது. இவ்வாறு தேர்வு நடத்துவது சரியே என்று உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.தமிழகம் முழுவதும் காளான்கள் முளைப்பதைப் போல ஏராளமான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தோன்றியுள்ள சூழ்நிலையில் ஆசிரியர் தேர்வில் தரத்தை உறுதிப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆகவே, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பான தமிழக அரசின் அரசாணை சரியானதே. மேலும், பணி நியமன தேர்வுப் பட்டியலில் இடம்பெற்ற காரணத்தாலேயே ஒருவர் பணியில் நியமிக்கப்பட்டதற்கான உரிமையைக் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட தேர்வு முறையில் நியமனம் நடைபெற வேண்டிய சூழலில், ஏற்கெனவே நடைபெற்ற தேர்வை அரசு ரத்து செய்தால் அது பற்றிக் கேள்வி எழுப்ப முடியாது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதை அரசாணை தெளிவுபடுத்துகிறது. அந்தச் சட்டத்தின்படி செயல்பட வேண்டியது மாநில அரசின் கடமையாகும். ஆகவே, அரசாணைக்கு எதிரான இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment