Tuesday 7 February 2012

TNPSC:கலந்தாய்வு மூலம் பணி ஒதுக்கீடு

டி.என்.பி.எஸ்.சி.யில் முதல் முறை




இளநிலை உதவியாளர்கள் 1044 பேரை நிரந்தரப்படுத்த, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் திங்கள்கிழமை தொடங்கிய கலந்தாய்வு. 
       சென்னை, பிப். 6: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.) முதல் முறையாக கலந்தாய்வு மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இளநிலை உதவியாளர்கள் 1,044 பேருக்கு கலந்தாய்வு நடத்தி அவர்களுக்கான மாவட்ட பணியிட ஒதுக்கீடு வழங்கும் நிகழ்வை திங்கள்கிழமை தொடங்கி வைத்தார் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நடராஜ். இந்த கலந்தாய்வு ஒருவார காலம் நடைபெற உள்ளது.தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து, அரசுப் பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க சுமார் 15 ஆயிரம் பேர் தாற்காலிக அடிப்படையில் அரசுப் பணியில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் இளநிலை உதவியாளர் நிலையில் பணியில் சேர்ந்தனர். அரசு ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு தாற்காலிக பணியாளர்களின் நிலைமை கேள்விக் குறியானது. அவர்கள் தாற்காலிக நிலையிலேயே தொடர்ந்து பணியாற்றி வந்தனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் அந்த நிலையே தொடர்ந்தது.தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி தாற்காலிகப் பணியாளர்கள் 15 ஆயிரம் பேர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களை நிரந்தரப்படுத்த 2008-ம் ஆண்டு சிறப்பு போட்டித் தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது. 
 
படிப்படியாக நிரந்தரம்
 
   300 மதிப்பெண்கள் கொண்ட அந்தத் தேர்வில் பொது அறிவை அடிப்படையாகக் கொண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு முதலில் பணி நிரந்தரம் செய்யும் பணிகள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடைபெற்றது. 5 கட்டங்களாக நடந்த பணிநிரந்தரம் செய்யும் நடவடிக்கையில் 9,885 இளநிலை உதவியாளர்களுக்கு மாவட்ட அளவிலான பணியிட ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து, மீதியுள்ள 1,044 பேருக்கு பணி நிரந்தரம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின.கலந்தாய்வு மூலம்: பணி நிரந்தரம் செய்யும்போது அவர்கள் விரும்பும் இடங்கள் குறித்து கருத்துக் கோரப்பட்டு கடிதம் அனுப்பப்படும். அதற்கு அவர்கள் பதில் கடிதம் அனுப்புவார்கள். இதன்பின், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து அவர்களுக்கு மாவட்ட அளவிலான பணியிட ஒதுக்கீட்டை வழங்க 3 மாதங்கள் வரை ஆகும்.ஆனால், கலந்தாய்வு மூலம் அவர்களுக்கு பணியிட ஒதுக்கீட்டை வழங்க டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நடராஜ் மற்றும் செயலாளர் உதயசந்திரன் ஆகியோர் முடிவு செய்தனர். இதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த சில நாள்களாக நடந்தன.ஒவ்வொரு மாவட்டத்திலும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, வகுப்பு வாரியாக அவர்களுக்கான இடங்கள் எத்தனை என்பன குறித்த விவரங்கள் கம்ப்யூட்டரில் தொகுக்கப்பட்டன. அரசுப் பணியாளர் தேர்வாணைய வளாகத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கியது.முதலில் வந்திருந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அதன்பின்பு, அவர்களின் விருப்ப மாவட்டங்கள் எவை என்பது குறித்து கேட்கப்பட்டது. இந்த கலந்தாய்வுக்கென 10-க்கும் மேற்பட்ட இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் விரும்பும் மாவட்டங்கள் ஒதுக்கப்பட்ட பிறகு, அங்கேயே அவர்களுக்கு அதற்கான ஒதுக்கீட்டு உத்தரவு வழங்கப்பட்டது.10-க்கும் மேற்பட்ட இந்த உத்தரவுகளை அளித்து, கலந்தாய்வை திங்கள்கிழமை தொடங்கி வைத்தார், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நடராஜ். இந்த கலந்தாய்வு ஒரு வார காலம் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
 
       இதுபோன்ற கலந்தாய்வின் மூலம் ஒளிவுமறைவற்ற தன்மையை டி.என்.பி.எஸ்.சி.க்குள் கொண்டு வர முடியும். முதல் நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். ஒரு வார காலத்துக்குள் 1,044 பேருக்கும் நடத்தப்பட்டு பணியிட ஒதுக்கீடுகள் வழங்கப்படும். இந்த ஒதுக்கீட்டை அவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அங்கு தான் அவர்களுக்கு பணிக்கான ஊதியம் மற்றும் இதர விவரங்கள் அச்சிடப்பட்டு பணிக்கான உத்தரவு வழங்கப்படும். அதுதான் முக்கியம்'' என்றார்.பணியிட ஒதுக்கீட்டில் சம்பந்தப்பட்டவரின் புகைப்படம், எந்தப் பணி, எந்த மாவட்டம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
 
கண்ணீருடன் நன்றி...
 
    வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட்டு தங்களது பணி நிரந்தரம் செய்யப்பட்டதால், இளநிலை உதவியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கோபிசெட்டிபாளையத்தில் இருந்த ராஜேந்திரன் என்பவர், தேர்வாணையத் தலைவர் நடராஜிடம் கண்ணீருடன் அழுது கையைப் பிடித்து நன்றி தெரிவித்தார். 'பல  ஆண்டுகளாக மாத ஊதியம் ரூ.5 ஆயிரத்தில் குடும்பத்தை நடத்தி வந்தேன். மிகவும் வறுமையில் வாடினேன். பணியை நிரந்தரம் செய்ய கடந்த காலங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை. இப்போது கலந்தாய்வு மூலம் நடத்தப்பட்டதால் விரும்பிய இடத்தில் பணியிடம் கிடைத்துள்ளது'' என்றார். விபத்தில் காயமடைந்த செம்பனார்கோவிலைச் சேர்ந்த தியாகராஜனுக்கு, தேர்வாணைய வளாகத்தில் அவர் இருந்த இடத்துக்கே சென்று பணியிட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment