Friday 17 February 2012

நவீனமயமாகிறது TNPSC நடைமுறை



நவீனமயமாகிறது அரசுப் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும்  நடைமுறை


       தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை நவீனமயமாகிறது. இதற்கான புதிய திட்டத்தைச் செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் உதவி ஆட்சியர் முதல் கடைநிலை ஊழியர் வரை அரசுத் துறைகள் அனைத்துக்குமான ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு தேர்வு அறிவிக்கப்படும் போதும், விண்ணப்பங்களை விநியோகம் செய்வதற்கும், பரிசீலிப்பதற்கும் தனித்தனிப் பிரிவுகள் அமைக்கப்படும். குறிப்பாக, குரூப் 2, வி.ஏ.ஓ. போன்ற தேர்வுகளுக்காகப் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து நுழைவுச் சீட்டுகளை வழங்க தேர்வாணைய அலுவலகத்தில் பிரிவு அலுவலர்களைத் தலைவராகக் கொண்டு 90 முதல் 100 பிரிவுகள் வரை கூட அமைக்கப்படும். இந்தப் பணிகள் இரவு பகலாக நடைபெறும். இது ஊழியர்கள் உள்பட அலுவலகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் கடுமையான பணிச்சுமையை ஏற்படுத்தும். இந்த நிலையில், விண்ணப்பங்களைப் பரிசீலிப்பது முதல் தேர்வு முடிவுகளை வெளியிடுவது வரை நவீன நடைமுறையைப் புகுத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. 
  
                              பணியாளர் தேர்வு  மேலாண்மைத் திட்டம் எனப்படும்  RPMS  
( RECRUITMENT PROCESS MANAGEMENT SYSTEM ) என்கிற புதிய திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் இப்போது கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களைப் பரிசீலிப்பது, விடைத்தாள்களைப் பிரதியெடுப்பது, தகவல்களை ஒருங்கிணைப்பது, முடிவுகளை வெளியிடுவது என அனைத்தையும் ஒரு தொடர்ச்சியான செயல்பாடாக மாற்றவும், தானியங்கி முறையில் அதைச் செய்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, அதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மார்ச் 1-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைப்பளு குறையும் : தேர்வாணையப் பணிகள் அனைத்தும் தானியங்கி நடைமுறையில் மாற்றப்படும்போது, ஊழியர்களுக்கான பணிச்சுமை பெருமளவில் குறையும். மேலும், ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுக்காமல் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்வாணைய அலுவலகத்தில் பணியாளர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில், தானியங்கி முறையிலான விண்ணப்பங்கள் பரிசீலனை போன்ற நடைமுறைகள் பெருமளவு கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment