Friday 10 February 2012

குரூப் 2 தேர்வு: உயர் நீதிமன்றம் மீண்டும் ஆணை

 வெற்றி பெற்றவர்களுக்கு 10 நாள்களுக்குள் பணி நியமன ஆணை: உயர் நீதிமன்றம்
  
                    சென்னை, பிப். 9: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 10 நாள்களுக்குள் பணி நியமன ஆணை அனுப்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



      வருவாய் ஆய்வாளர், சார்பதிவாளர், உதவிப் பிரிவு அலுவலர், நகராட்சி ஆணையர், உதவி வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டது.அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாவட்ட வாரியாக பணியிடம் ஒதுக்கி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்வாணையம் அறிவித்தது. எனினும், பணிகள் ஒதுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை அனுப்பப்படவில்லை என்று கூறி எம். குமாரவேலு, வி. பாலமுருகன், பி. குருநாதன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சுகுணா, பணிகள் ஒதுக்கப்பட்டவர்களுக்கு 6 வாரங்களுக்குள் பணி நியமன ஆணையை அனுப்ப வேண்டும் என்று கடந்த டிசம்பர் 22-ம் தேதி உத்தரவிட்டார்.
         இந்நிலையில் இந்த உத்தரவில் சற்று மாற்றம் செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய நிர்வாகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே, பணி நியமனம் என்பது இந்த விசாரணையின் முடிவுக்கு கட்டுப்பட்டது என்ற நிபந்தனையை உத்தரவில் சேர்க்க வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.இந்த மனு, நீதிபதி சுகுணா முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு குறிப்பிடும் நிபந்தனையை சேர்க்க அனுமதித்த நீதிபதி, பணி நியமன ஆணையை இன்னும் 10 நாள்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார்.

1 comment: