Thursday 5 January 2012

வி.ஏ.ஓ. பணி - உயர் நீதிமன்றம் உத்தரவு




வி.ஏ.ஓ. பணி - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமன ஆணையை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்புதல் என்ற பெயரில், இடஒதுக்கீட்டு சதவீதத்தை விட கூடுதலான இடங்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த கே. ராதா உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  
 
           இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சுகுணா பிறப்பித்த உத்தரவு:  கிராமப்புற வளர்ச்சிப் பணிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர்களின் பணி என்பது மிகவும் முக்கியமானதாகும். இந்நிலையில், காலியாக உள்ள வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்பிட தேர்வு நடத்தப்பட்டு, பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.  எனவே, வி.ஏ.ஓ. பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமண ஆணையை நான்கு வாரத்துக்குள் அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இட ஒதுக்கீட்டு அளவுக்கு மேல் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி இந்த வழக்கின் இறுதி விசாரணையின்போது ஆராய்ந்து, முடிவு செய்து கொள்ளலாம். ஒருவேளை கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் கூட, எதிர்காலத்தில் வி.ஏ.ஓ. தேர்வு நடைபெறும்போது அதனை சரி செய்து கொள்ளலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.  மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களில், கடந்த 2007 - 2008-ம் ஆண்டில் 2,500 வி.ஏ.ஓ.க்கள் பணியில் நியமிக்கப்பட்டனர். அதன் பின்னர் பின்னடைவு காலிப் பணியிடங்கள் என்ற அடிப்படையில் 197 இடங்கள் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டியிருந்தது.  இந்நிலையில், கடந்த 21.7.2010 அன்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிக்கையில் 1,077 வி.ஏ.ஓ. பணியிடங்கள் பின்னடைவு இடங்கள் என்ற அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு சட்ட விரோதமானதாகும். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியிருந்தனர்.  
 
            இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதம் மற்றும் பழங்குடியினருக்கு 1 சதவீதம் இடஒதுக்கீடு என்ற அடிப்படையில், இன்னும் 1,232 இடங்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டியுள்ளது என்று கூறியிருந்தார்.  எனினும், மனுதாரர்கள் தரப்பு வழக்குரைஞர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசு தலைமை வழக்குரைஞர் தவறான புள்ளி விவரங்களை அளித்துள்ளதாக கூறினார்கள்.  அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணை அனுப்பப்பட வேண்டும் என்றும், வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment