Friday 13 January 2012

TNPSC ஊழல்: 73 இடங்களில் சோதனை





 21 மாவட்டங்களில் 73 இடங்களில் சோதனை


   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் அரசு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்து இருப்பது தெரியவந்தது. பல் டாக்டர்கள், டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

       இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்கள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது முறைகேடுக்கான ஆவணங்கள், கட்டுகட்டாக பணம், ஹால்டிக்கெட்டுகள், பரிசு பொருள்கள், வெளிநாட்டு மது பாட்டில்கள் போன்றவை சிக்கின. அவை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.

  2-வது கட்டமாக அரசு பணியாளர்கள் தேர்வாணைய அலுவலகத்திலும், அங்கு பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. 
 இந்த கம்ப்யூட்டர்களை நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து முறைகேடுகளை கண்டுபிடித்தனர்.  முக்கிய தகவல்கள் அடங்கிய கம்ப்யூட்டர் சர்வர் கைப்பற்றப்பட்டது.இதன் மூலம் யார்-யார்? தொடர்பு கொண்டு இருக்கிறார்கள், யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

   இதில் பணியாளர்கள் நியமனத்தில் இடைத்தரகர்களாக அரசு அதிகாரிகள், ஊழியர்கள், அரசியல் பிரமுகர்கள் செயல்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 3-வது கட்டமாக இடைத்தரகர்கள் வீடுகளில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். 

4-வது கட்டமாக இன்று தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு பணிகளுக்கான தேர்வுகளில் பங்குபெற்று தேர்வு எழுதியவர்களின் வீடுகள், அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இவர்கள் மீது தேர்வுகளில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் 21 மாவட்டங் களில் 73 இடங்களில் தேர்வு எழுதியவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

அதிகாலையில் அதிகாரிகள் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு குழுக்களாக சென்று ஒரே நேரத்தில் இந்த சோதனை மேற்கொண்டனர்.  

சென்னையில் 10 இடங்களில் சோதனை நடந்தது. வளசரவாக்கம் எஸ்.வி.எஸ். நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீடுகளில் டி.எஸ்.பி. சரசுவதி தலைமையில் சோதனை நடந்தது.

மதுரையில் 13 இடங்களிலும், காஞ்சீபுரத்தில் 3 இடங்களிலும், தஞ்சை- புதுக்கோட்டையில் தலா 5 இடங்களிலும், சேலம், வேலூர், சிவகங்கையில் 4 இடங்களிலும், திருச்சி, தேனி, தர்மபுரி, ஈரோடு நகரங்களில் 3 இடங்களிலும் சோதனை நடந்தது.

அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் தொடர் சோதனை தேர்வாணைய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோசடியாக தேர்வு எழுதி பணி நியமனம் செய்யப் பட்டவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிடாமல் ரகசியமாக வைத்து அடுத்தடுத்து அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் பெரிய அளவில் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.   அதே நேரம் நேர்மையான முறையில் தேர்வெழுதும் மாணவர்கள் இனி நல்லதொரு எதிர்காலம் உள்ளதாக நினைக்கின்றனர்.

ஏற்கனவே நடந்த சோதனையின் அடிப்படையில் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியலை அதிகாரப் பூர்வமாக வெளியிடுவதற்கு முன் அவர்களை நேரில் சந்தித்தும், தவறான வழியிலும் லஞ்சம் பெற முயற்சி செய்தது, மோட்டார் வாகன ஆய்வாளர் காலி பணியிடங்களில் தகுதியற்ற பணியாளர்களை தேர்வு செய்ததன் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டது,
 லஞ்ச ஊழல் முறைகேடுகளை தடுக்க முயன்ற தேர்வாணைய அலுவலரான ஐ.ஏ.எஸ். அதிகாரியை செயல்படவிடாமல் தடுத்தல், விசாரணைக்காக ஆவணங்களை தர மறுத்து அதிகார துஷ்பிரயோகம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை குறித்த தொலைகாட்சி செய்திகளைக் காண :http://www.youtube.com/watch?v=v9PHxPKCc5M&feature=related







No comments:

Post a Comment