Saturday 14 January 2012

லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய கால்நடை டாக்டர்கள்  
தமிழ்நாடு முழுவதும் தேர்வாணைய ஊழல் தொடர்பாக கால்நடை டாக்டர்கள், தேர்வு எழுதியவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டத்தில் பாரதிபுரம் உள்பட 3 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டம் தொப்பூரைச் சேர்ந்தவர் கஜேந்திரவேலு. இவர் ஓமலூரில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சித்ரா.

இவர் தர்மபுரியில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை இவர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தர்மபுரி செந்தில் நகர் செல்வகணபதி தெருவில் உள்ள கால்நடை டாக்டர் பத்மா வீட்டிலும் லஞ்சஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

பாப்பாரப்பட்டியில் உள்ள ஒருவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள்.   சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி, இளம்பிள்ளை மற்றும் அம்மா பேட்டை அருகே உள்ள நஞ்சம்பட்டி காலணி மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் பகுதியிலும் டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வாகி பணிபுரிபவர்கள் வீடுகளில் இன்று லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் அம்மாபேட்டையை அடுத்த நஞ்சம்பட்டி காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் டி.என.பி.எஸ்.சி தேர்வு எழுதி இருந்தார். வீட்டில் யாரும் இல்லாததால் ராஜ்குமார் வந்தால் சேலம் லஞ்ச ஒழிப்பு பரிரிவு போலீசுக்கு நேரில் வருமாறு அவரது உறவினர்களிடம் கூறி விட்டு சென்று விட்டனர்.

அரசு கருவூலத்தில் வேலை பார்க்கும் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த தியாராஜன் வீட்டிலும் இன்று லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதே போல சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டியைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியை ரேவதி வீட்டிலும் சோதனை நடத்தினார்கள்.  

திருச்சியில் உறையூர் பாண்டமங்கலத்தில் சம்பத் என்பவர் வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. அம்பிகாபதி தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். முசிறி அருகே கோட்டத்தூரில் லோகநாதன் என்பவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அரியலூரில் தியாகராஜன் என்பவர் வீட்டிலும் சோதனை நடந்தது.  

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் அருளானந்தம் என்பவர் குரூப் 2 தேர்வில் தேர்வாகியுள்ளார். லஞ்ச ஒழிப்பு டி. எஸ்.பி. சியாமளா தேவி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அருளானந்தம் வீட்டிற்கு இன்று சென்று சோதனையிட்டு வருகின்றனர். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியில் கண்ணன் என்பவர் குரூப்-2 தேர்வில் தேர்வாகியுள்ளார். அவரது வீட்டில் இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.

 சிவகங்கையில் 2 இடங்களிலும், காளையார் கோவிலில் ஒரு இடத்திலும், மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரத்தில் ஒரு வீட்டிலும் சோதனை நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்தவர் பூவலிங்கம். இவர் வருவாய்த்துறை ஆய்வாளராக உள்ளார்.

இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணம் கொடுத்து வேலையில் சேர்ந்ததாக தெரிகிறது. இந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பூவலிங்கம் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். ஈரோடு சூளை பகுதியில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதியவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் 5 இடங்களில் தேர்வு எழுதியவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.   காங்கயம் அருகே உள்ள ஊதியூர் வேலாயுதம் பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருந்தார். இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.  

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள திரு.வி.க. நகரை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் குரூப்-2 தேர்வு எழுதி, வேலைக்கு தேர்வாகி உள்ளார். இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. தங்கசாமி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

நேர்முக தேர்வு நடந்த சமயத்தில் சண்முகவேல் குடும்ப உறுப்பினர்களின் பேங்க் கையிருப்பு எவ்வளவு? அதற்கு முன்பாக பெரிய அளவில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா? என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.  

நாகர்கோவில் கோட்டார் சமரச வீதியில் வசித்து வரும் ஸ்ரீஜித் என்பவர் 2009-ல் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு எழுதியிருந்தார். இவரது வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதுபற்றி டி.எஸ்.பி. சுந்தர்ராஜ் கூறுகையில் “தற்போது ஸ்ரீஜித் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. உயர் அதிகாரிகள் கொடுக்கும் தகவலின்பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.  

வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஆற்காடு ஆகிய இடங்களில் உள்ள டாக்டர்கள், வருவாய் துறையினர் வீடுகளில் சோதனை நடந்தது. திருப்பத்தூர் அருகே உள்ள ஜெயபுரம் கிராமத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் பிரதாப் என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இதேபோல் ஆற்காடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் டாக்டர் பத்மா என்பவரது வீட்டிலும் நபீசாநகரில் டாக்டர் சுதா என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.  

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மூக்காண்ட பள்ளியில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிபவர் விஜயலட்சுமி. இவரது வீடு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ளது. இவரது வீட்டிலும் இன்று 3 பேர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினார்கள்.  

மதுரை மாவட்டத்தில் இன்று குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். மதுரை டி.எஸ்.பி. கலாவதி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் மதுரை எஸ்.ஆலங்குளம், கூடல்புதூர், நாராயணபுரம், உசிலம்பட்டி, சோழவந்தான் உள்பட 13 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

 

No comments:

Post a Comment