Thursday 5 January 2012

TRB - 24000 ஆசிரியர்கள் நியமனம்

B.Ed பட்டதாரிகள் மகிழ்ச்சி .
             ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இந்த ஆண்டு (2011-12) மொத்தம் 24 ஆயிரத்து 17 ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.  ஆசிரியர் நியமனப் பணிகளை பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.  பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 55 ஆயிரம் பேர் இந்த ஆண்டு நியமிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.  அதைத் தொடர்ந்து, "அனைவருக்கும் இடைநிலைக் கல்வி" எனும் திட்டத்தின் கீழ் சுமார் 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக உருவாக்க உத்தரவிடப்பட்டது.  இவற்றில் 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் மாவட்ட அளவில் இப்போது நடைபெற்று வருகின்றன.  மீதமுள்ள பணியிடங்கள்: இளநிலை உதவியாளர் உள்ளிட்ட மீதமுள்ள பணியிடங்கள் பள்ளிக் கல்வித் துறையால் அடுத்தகட்டமாக நிரப்பப்படும் எனத் தெரிகிறது.  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மொத்தம் எவ்வளவு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற விவரம் இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. தமிழக அரசின் உத்தரவின் மூலம் மொத்தம் 24,017 ஆசிரியர்கள் இந்த ஆண்டு நியமிக்கப்பட உள்ளது உறுதியாகியுள்ளது. 
             முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் எழுத்துத் தேர்வின் மூலம் நியமிக்கப்படுவர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.  உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை, இடைநிலை ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுமூப்பின் அடிப்படையில் நியமிக்கப்படுவர்.  ஜூன் மாதத்துக்குள் நியமனம்: இந்த ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பிப்ரவரி மாதத்தில் தொடங்கி ஜூன் மாதத்தில் இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடையும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.  பிப்ரவரியில் தேர்வு: 34 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு மொத்தம் 67 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.  இதற்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 8-ம் தேதி நடைபெற இருந்தது. பின்னர் இந்தத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தேர்வு பிப்ரவரி 19 அல்லது 26-ம் தேதி நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்துக்காக 34 மூத்த விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வு மார்ச் மாதம் நடைபெறும். இப்போது விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.  அரசுப் பொறியியல் கல்லூரிகளுக்கு 156 உதவிப் பேராசிரியர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும். இதற்கான எழுத்துத் தேர்வு ஏப்ரலில் நடைபெறும் எனத் தெரிகிறது.   
 நியமிக்கப்பட உள்ள ஆசிரியர்கள் எண்ணிக்கை:  
முதுநிலை பட்டதாரி  ஆசிரியர்கள்        - 2,895 
 பட்டதாரி ஆசிரியர்கள்                            - 14,761 
இடைநிலை ஆசிரியர்கள்                        - 5,451  
சிறுபான்மை பாட ஆசிரியர்கள்              - 32 
 உடற்கல்வி ஆசிரியர்கள்                        - 687   
தையற்கலை ஆசிரியர்கள்                      - 47  
இசை ஆசிரியர்கள்                                   - 41  
ஓவிய ஆசிரியர்கள்                                  - 78  
விவசாய ஆசிரியர்கள்                             - 25  
மொத்தம்                                                   - 24,017

No comments:

Post a Comment