Saturday 14 January 2012

TNPSC ஊழல்: கைதாகும் அதிகாரிகள்

  குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு தண்டனை .
டி.என்.பி.எஸ்.சி. ஊழல்: 53 அதிகாரிகள் கைது ஆவார்களா?-  குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு தணட்னை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.) சேர்மனாக இருந்த செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி செல்லமுத்து மற்றும் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது தேர்வாணைய ஊழல் தொடர்பாக முக்கிய ஆதாரங்கள் சிக்கின. 2-வது கட்டமாக நவம்பர் 18-ந்தேதி தேர்வாணைய அதிகாரிகள் 13 பேரின் வீடுகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன. பின்னர் இடைத்தரகர்களாக செயல்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் டிசம்பர் 13-ந்தேதி சோதனை நடைபெற்றது.

இந்த 3 கட்ட சோதனை களிலும் டி.என்.பி.எஸ்.சி. ஊழல் தொடர்பாக ஏராளமான ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். முறைகேடான வழியில் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து அரசு பதவிகளில் சேர்ந்தவர்கள் யார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். கால்நடை டாக்டர்கள், உதவி செக்சன் அதிகாரி (ஏ.எஸ்.ஓ.) ஆகிய பதவிகளை நியமனம் செய்வதில் அதிக அளவில் முறைகேடு நடைபெற்றது தெரிய வந்தது.

இதுபோன்று முறைகேடாக அதிகாரிகள் அந்தஸ்தில் இருக்கும் 53 பேரின் பட்டியல் தயாரானது. இவர்களது வீடுகளில் 4-வது கட்டமாக நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். காலை 7 மணிக்கு தொடங்கிய இச்சோதனை இரவு வரை நீடித்தது. தமிழகம் முழுவதும் மொத்தம் 76 இடங்களில் ஒரே நேரத்தில் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். ஊழல் தடுப்பு சட்டப் பிரிவின்படி, லஞ்சம் வாங்குவதும் குற்றம். கொடுப்பதும் குற்றம். இதன் அடிப்படையில் லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்த அதிகாரிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை தயார் செய்து விட்டுத்தான் தேர்வுக்கு தயாராகியுள்ளனர். நேற்று நடைபெற்ற சோதனையின்போது யார் -யாரிடம் எவ்வளவு பணம் கொடுத்தோம் என்று இவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்டம் 12-வது பிரிவின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

முறைகேடாக பணியில் சேர்வதற்காக இவர்கள் தேர்ந்தெடுத்த குறுக்கு வழி பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விரிவாக அறிக்கை தயாரித்துள்ளனர். எனவே லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக 58 அதிகாரிகளும் கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டு இவர்கள் கைதாகி 5 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

நேர்மையாக படித்து அரசு பணிக்காக எண்ணற்ற இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில் தேர்வாணையமே முறைகேட்டில் ஈடுபட்டது இளைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்வாணைய தலைவர் செல்லமுத்து நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

அரசு பணியாளர் தேர்வாணையத்தில் புதிதாக நியமிக்கப்படுபவர்கள் நேர்மையாக செயல்பட வேண்டும் அப்போதுதான் இது போன்ற முறைகேடுகளை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

No comments:

Post a Comment