Friday 20 January 2012

TNPSC :புதிய தலைவர் ஆர்.நட்ராஜ்

நட்ராஜ்-ராஜநடை


  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக ஆர்.நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். டி.என்.பி.எஸ்.சி - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடுகள் புகாரைத் தொடர்ந்து அதன் தலைவர் பொறுப்பில் இருந்து செல்லமுத்து விலகினார். இந்நிலையில், அந்தப் பதவிக்கு ஆர்.நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். டிஜிபியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி இவர். இந்திய அரசியல் சட்டம் 316(1)-ன் படி, தமிழக ஆளுநர் இவரை பதவியில் நியமித்துள்ளதாகவும், ஆர்.நட்ராஜ் 62 வயது நிறைவுறும் வரை பதவியில் இருக்கலாம் என்றும் ஆளுநர் உத்தரவை சுட்டிக்காட்டி அரசின் தலைமைச் செயலர் அறிவித்துள்ளார்.

     தலைவர் பதவிக்கு ஐ.பி.எஸ்., அதிகாரி நியமிக்கப்படுவது இது முதல் முறை. இவரது பதவிக்காலம் 2013ம் ஆண்டு மார்ச் 2ம்தேதி வரை உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த அவர், இயற்பியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இளங்கலை படிப்பை தனது சொந்த மாவட்டத்தில் படித்தாலும், முதுகலைப் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தார்.  1975-ல் ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் எஸ்.பி.யாக தனது போலீஸ் பணியைத் தொடங்கினார். தென் மாவட்டங்களை கலக்கி வந்த சீவலப்பேரி பாண்டியைப் பிடிப்பதிலும், காட்டுக் கொள்ளையன் வீரப்பனைத் தேடும் பணியிலும் முக்கியப் பங்கு வகித்தவர்.  வீரப்பனைத் தேடி சுட்டுக் கொன்ற அதிரடிப்படையில் கூடுதல் டிஜிபியாக நடராஜ் பணியாற்றினார். இதன் பின், சென்னை மாநகர போலீஸ் ஆணையராக கடந்த 2003 முதல் 2006 வரை பணியாற்றினார். மாநில மனித உரிமைகள் ஆணையம், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெற்றார். தனது சிறப்பான போலீஸ் பணிக்காக 1993-ல் குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கம் நடராஜுக்கு வழங்கப்பட்டது.   தினமணி பத்திரிகையில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதி வருபவர். சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், பணியில் நேர்மையாளராக அறியப்படுபவர்.. 


நம்பிக்கை நட்சத்திரங்கள் : TNPSC புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள திரு.நடராஜ், TNPSC செயலராக உள்ள திரு.உதயச்சந்திரன், மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளரான திரு.இறையன்பு ஆகியோரிடம் நிறைய எதிர்பார்ப்பு நிலவுகிறது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கும் இவர்கள் தத்தமது நேர்மையான செயல்பாடுகளின் மூலம் நமது இளைஞர்களின் வாழ்வில் விடியலைத் தருவார்கள் என்று நம்புவோம்.
                                  
                 
டி.என்.பி.எஸ்.சி., புதிய தலைவர் நட்ராஜ், "பயோ-டேட்டா'

பெயர்                                     : ஆர்.நட்ராஜ்
தந்தை                                    : ராமச்சந்திரன் (புனைப்பெயர் உமா சந்திரன், பிரபல எழுத்தாளர்.)
தாயார்                                  : கமலம்மாள்
சொந்த ஊர்                        : முன்னீர்பள்ளம், நெல்லை மாவட்டம்.
வயது                                    : 60
கல்வி                          :பள்ளிப்படிப்பு,  சென்னை திருவல்லிக்கேணியில்                    உள்ள     இந்துமேல்நிலைப்பள்ளி. விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்.சி.,
பின், மாநிலக் கல்லூரியில் எம்.எஸ்.சி.,பிசிக்ஸ் பட்டம் பெற்றார். அதன்பின், சட்டப்படிப்பு மற்றும் எம்.ஏ., பொது நிர்வாகம் பட்டமும் பெற்றவர்.
மனைவி                             : நிர்மலா
பிள்ளைகள்                  : இரு மகன்கள். நிகிலேஷ், அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர். மற்றொரு மகன் நித்திலேஷ், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞராக தொழில் செய்கிறார்.
 
கூடுதல் தகவல்கள்:
நட்ராஜ் குறித்து கூடுதல் தகவல்கள்: "அவர் அலுவலகத்திற்கு யார் போனாலும், அன்பாக வரவேற்பார். காபி, டீ கொடுப்பார். கல கலப்பாக, பல விஷயங்களையும் பேசுவார். ஆனால், இனிக்கப் பேசியோ, அவரைப் புகழ்ந்து பேசியோ, அவரை வைத்து ஏதாவது, காரியம் சாதிக்கலாம் என நினைத்தால் அது தவறு. ஏனெனில், எதைக் கேட்டாலும், மனிதர் விதிமுறைகளை மேற்கோள் காட்டி மறுத்துவிடுவார்''. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது,"நட்ராஜ், சரியான சாய்ஸ்!' மிகச்சிறந்த ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. இனிமேல், டி.என்.பி.எஸ்.சி., அமைப்பில் சிறிய கீறல் கூட நடக்காது. அந்தளவிற்கு நிர்வாகம் சிறப்பாக இருக்கும்,'' என்றார். 

No comments:

Post a Comment