Saturday 14 January 2012

லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்த அதிகாரிகள்

லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்த அதிகாரிகள் பதவி பறிபோகுமா?
லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்த அதிகாரிகள் பதவி பறிபோகுமா?

       அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு தொடர்பாக தமிழ் நாடு முழுவதும் 73 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.   சோதனைக்குள்ளான 53 பேர் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து தமிழக அரசில் பல்வேறு பிரிவுகளில் அதிகாரிகள் அந்தஸ்தில் பணிபுரிகிறார்கள். கால்நடை டாக்டர்கள், பல் டாக்டர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தேர்வு முடிவுக்காக காத்து இருக்கிறார்கள்.
இதுபற்றி லஞ்ச ஒழிப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த ஆட்சியில் 2006-ல் இருந்து 2008 வரையில்  பல்வேறு அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டன. குரூப்-1 பதவிகளான சப்-கலெக்டர், டி.எஸ்.பி., அரசு துறை பதிவாளர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.   குரூப்-2 பதவிகளும் நிரப்பப்பட்டன.
இந்த இரண்டிலும்தான் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக குரூப்-1 பணியிடங்களுக்குத்தான் அதிக அளவில் போட்டி இருந்தது. இதற்காக பலர் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் கொடுத்து அரசு பணியில் சேர தயாராக இருந்தனர்.
இதனை தேர்வாணைய தலைவர், உறுப்பினர்களும், அதிகாரிகளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளனர்.   தேர்வாணைய தலைவர்-உறுப்பினர்கள் வீடுகளில் நடந்த சோதனையின் போது அதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்தது.
ரூ.1 1/2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சம் வரை லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசு பணியில் பலர் சேர்ந்துள்ளதை கண்டுபிடித்தோம். எங்களது விசாரணையில் 53 பேர் லஞ்சம் கொடுத்து அரசு அதிகாரிகளாக பணியில் அமர்ந்துள்ளது தெரிய வந்தது. 10-க்கும் மேற்பட்டவர்கள் அரசு தேர்வு எழுதி அதன் முடிவுக்காக காத்திருக்கிறார்கள். இவர்களது வீடுகளில்தான் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதிக பட்சமாக மதுரை மற்றும் சென்னையில் முறைகேடாக பணி நியமனம் நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.  
லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றமாகும். லஞ்சம் வாங்குவோருக்கு என்ன தண்டனையோ, அதே அளவு தண்டனை தான் லஞ்சம் கொடுப்பவருக்கும் கிடைக்கும். இரண்டும் சமமான குற்றமாக கருதப்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சி. ஊழலில் இதுவரை லஞ்சம் வாங்கியவர்கள், லஞ்சம் வாங்கி கொடுத்தவர்களின் வீடுகள் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இப்போது முதல் முறையாக லஞ்சம் கொடுத்தவர்களும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். முறைகேடாக பணியில் சேர்ந்தவர்கள் பட்டியல் லஞ்சம் ஒழிப்பு போலீஸ் வசம் உள்ளது. எனவே இவர்கள் பதவியில் நீடிக்க முடியுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டால் இவர்களது பதவி பறிபோகும் நிலை ஏற்படும்.

1 comment:

  1. பிடிங்க சார்.. காசு கொடுத்து வேலைக்கு சேர்ந்த எல்லோரையும் பிடிச்சு உள்ள போடுங்க சார்....

    ReplyDelete